தாயென்று கும்பிடடி பாப்பா
- மொட்டை மாடியில் ரெட்டைக் கொலை
நடராஜன் கல்பட்டு
மொட்டை மாடியில் ரெட்டைக் கொலையா?
“என்ன மொட்டெ மாடிலெ ரெட்டெக் கொலையா? எங்கெங்கே? யாரு யாரெக் கொலெ பண்ணாங்க?
“எங்க ஊட்டு மாடிலெதான்.”
“சொல்லுங்க, சொல்லுங்க., பரபரப்பான விசயமா இருக்கும் போல இருக்குதே.”
“மழெ நாளும் குளுரு நாளுந்தான் போயிடிச்சே, ஊட்டுக்குள்றயே கூண்டுப் புலியாட்டம் நடக்கறதெ உட்டூட்டு மொட்டெ மாடிக்கிப் போயி காலாற நடந்தூட்டு வாங்க ன்னு எம் பொஞ்சாதி சொன்னா.”
“சரின்னு நானும் மூட்டு வலியெப் பாக்காமெ மெதுவா கைப்புடிச் சுவத்தெப் புடிச்சிகிட்டு ஒரொரு படியா ஏறினே. இன்னும் ஆறே படிதான். அதையும் ஏறீட்டா மொட்டெ மாடிக்குப் போயிருப்பேன். அப்பொ மொட்டெ மாடிலெ ரெண்டு பேரு பேசிகிட்டது என் காதுலெ விளுந்தீச்சு.”
“என்ன பேசிக்கிட்டாங்க அவங்க?”
“சொல்றேன் கேளுங்க அவுங்க பேசிகிட்டெதெ அப்பிடியே.”.
“சோலெ...”
“ஐயா....”
“போட்டுத் தள்ளீடு இது ரெண்டுங்களெ.”
“ஐயா.... என்ன சொல்றீங்க? பச்செப் புள்ளெங்களெயா?”
“பச்செப் புள்ளெங்க என்னடா பச்செப் புள்ளெங்க?. காலணாக்கு ஒத்தாசெ இல்லெ.”
“ஐயா நீங்கெ ஆசெ ஆசெயாக் கொண்டாந்து வளத்தீங்க. அதுங்களெப் போயி போட்டுத் தள்ளச் சொல்லுறீங்களே?”
“ஆமாண்டா நாந்தான் ஆசெயா வளத்தேன். வளத்ததுக்கு நன்னி விசுவாசம் வாணாம்?”
“என் நெஞ்சு பட படன்னு அடிச்சிக்க ஆரம்பிச்சுது. ‘ஏய் நீ ஆம்பிளெ தானே? என்னமோ பெரிசா சின்ன வயசுலெ லாரிலேந்து டீசல் எண்ணெத் திருடினவனெ கையும் கள்வுமாப் பிடிச்சு அவன் திருடின எண்ணெயெ அவன் தலெலெயே ஊத்தி அபிஷேகம் பண்ணினேன்னு சொல்லித் தம்பட்டம் அடிச்சுப்பியே. இப்பொ என்ன வந்திரிச்சு ஒனக்கு?’ ன்னு ஒரு கொரல் கேட்டுது. அது வேறெ எங்கேருந்தும் வரெல்லெ. எனக் குள்ற இருந்து தான் வந்தீச்சு. என் மனச்சாட்சியே என்னெக் குத்திக் கேக்குதோ?
அடுத்த படிலெ காலெ எடுத்து வெச்சேன். மனசுக்குற ஒரு பயம். என் தலெயெப் பாத்ததும் ஒரு வேளெ. நம்ம பேச்செக் கேட்ட இவனெ உசுரோட உட்டா நமக்குதான் ஆபத்துன்னு ரெட்டெக் கொலெயெ மூணு கொலெயா ஆக்கீட்டாங்கன்னா?”
“சீ! நீயெல்லாம் ஒரு ஆம்பிளெ? உள்ளிருந்து கேட்டது இன்னோரு வாட்டி அந்தக் கொரலு.”
“கண்ணெதிரே நடக்கப் போற ரெட்டெக் கொலெயெ தடுத்து நிறுத்தலேன்னா என் பொஞ்சாதியும் நாளெய்க்குக் கேக்க மாட்டா ‘ஆம்ப்ளெயா ஐயா நீ’ ன்னு?”.
“போன தைரியத்தெ வரவளிச்சுகிட்டு அடுத்த அஞ்சு படியெ வேக வேகமாத் தாண்டி மொட்டெ மாடிக்குப் போனா அங்கெ வெங்குத் தாத்தா, அதான் எங்க அப்பாரு. பக்கத்துலெ சோலெ கையிலெ அறுவாளோட.”
“அப்பாரு சொல்லி கிட்டு இருந்தாரு, ‘ஆமாண்டா சொலெ. ஆசையாத்தேன் வளத்தேன். ஆசெயா சப்போர்ட்டு பண்ணினதுக்கு ரெண்டு சப்போட்டாப் பளமாவது தந்தீச்சுங்களா இத்தெனெ வருசமா இதுங்க? மாடி பூரா எலெய குப்பையாக் கொட்டுதுங்க. வேலெக்காரியெப் பெருக்கி வாரிக் கொட்டும்மான்னா, ‘வேறெ வேலெ இல்லெ சாமி. வாரா வாரம் பெருக்கி கையெ வலிக்குது. பேசாமெ வெட்டிப் பொடுங்க சாமி’ ங்கறா.”
“அவரு வெச்செ மரம் அவரு வெட்டெச் சொல்லுறார்னு சும்மா இருக்க முடியுமா? ‘அப்பா வெட்டதீங்கப்பா அதெ. அது பளம் தருதோ இல்லியோ. ஒங்க படுக்கெ உள்ளுக்கு மேலெ நெளலு தருது. அதுங்க இல்லேன்ன ஒங்க உள்ளு என்னா சூடாயிடும் தெரியுமா? இருந்தூட்டுப் போகட்டும்பா அதுங்க. நான் பெருக்கிப் போடுறேன் குப்பெயெ’ என்று சொல்லி ரெட்டெக் கொலெயத் தடுத்து நிறுத்தினேன்.”
நடராஜன் கல்பட்டு
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














