தாயென்று கும்பிடடி பாப்பா
- அக்ஷய த்ரிதியை
Natarajan Kalpattu
இன்று அக்ஷய த்ரிதியை. இதை நான் சொன்ன உடனே அக்ஷய த்ரிதியைக்கும் ஆண் பிளைக்கும் என்னையா சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறதே. சொல்றேன் கேளுங்க.
இன்று காலை வழக்கம் போல ஏழு மணிக்குப் படுக்கையை விட்டு எழுந்ததும் பல் தேய்த்து முகம் கழுவி மீண்டும் படுக்கை அறைக்குள் காலை வைத்தால் என் கண்ணில் பட்டது திறந்த அலலமாரியின் கதவிடுக்கில் கீழே கிடந்த என் கால் சட்டை. இது எப்படி கீழே விழுந்திருக்கும்? என்றுமே நான் அதை ஒழுங்காக ஒரு ஹேங்கரில் மாட்டி அல்லவா வைப்பேன்.
கால் சட்டையை எடுத்ததும் சட்டென்று அதன் பாக்கெட்டிற்குள் கையை விட்டேன். இருந்தது அங்கே என் அக்ஷய பாத்திரம், அதான் எனது மணி பர்ஸ். நல்ல வேளை மினிமா எடுக்க வில்லை. இந்த சந்தோஷம் நீடித்தது ஒரு வினாடி தான். மறு வினாடி பர்ஸுகுள் என் கையை விட்ட போது அடித்தது ஷாக் எனக்கு ஆயிரம் வோல்ட் மிசாரம் போல. அங்கு ‘மணி’ என்ன, ஒரு பைசா கூட இல்லை. நேற்றுதான் வாங்கி வந்திருந்தேன் வங்கியில் இருந்து பத்தாயிரம் ரூபாய், வீட்டில் இருந்த திரேதா யுகத்து கருப்பு வெள்ளை டீ.வீ. யைத் தூக்கிப் போட்டு விட்டு எல்லோரையும் போல ஒரு கலர் டீவீ வாங்கி வந்திடலாம் என்று நினைத்து. இது கூட எப்போது? மினிமா, “இன்னா டீவீம்மா வெச்சிருக்கே நீ ஊட்டுலெ? எங்க ஊட்டுக்கு வந்து பாரு கலைஞர் கொடுத்துருக்குற கலர் டீவீயெ” என்று சொன்ன பிறகுதான் நான் எடுத்த முடிவு கலர் டீ.வீ. வாங்குவது என்பது. அந்தப் பத்தாயிரம் எங்கே போயிற்று இப்போது? ஆண்டவா வாயெக் கட்டி வயத்தெக் கட்டிச் சேத்த பணமாச்சே அது.
பங்கஜத்தைக் கேட்டு விட வேண்டியதுதான். “பங்கஜம்... பங்கஜம்...” பதில் எதுவும் இல்லை அடுப்பங்கரையில் இருந்து. அங்கு போய்ப் பார்த்தால் அவளையும் காணோம். வழக்கமாகக் கலந்து வெந்நீர் கெட்டிலுக்குள் அவள் வைத்திருக்கும் காப்பியையும் காணோம். கெட்டில் இருக்கும் இடத்திலே ஒரு வெள்ளைக் காகிதம். சின்ன கல் ஒன்று அதன் மேல். மடித்து வைத்திருந்த காகிதத்தைப் பிரித்துப் படித்தேன்.
“நேத்து சாய்ங்காலம் கோடியாத்துக் கோமா வந்திருந்தான்னா. அவ சொன்னா, ‘பங்கஜம்... பங்கஜம், நாளைக்கு அக்ஷய த்ரிதியை வரதுடீ. அன்னிக்கு அரெப் பவுனாவது தங்கம் வாங்கினா ஆயுசு பூரா வீட்டுலெ பணமாக் கொழிக்கும்னு சொல்லுவாடீ.’ கூடவே அவ இன்னோண்ணும் சொன்னான்னா. ‘இன்னிக்கி நகெக் கடெலேல்லாம் பெரிய க்யூ வரிசெ நிக்கும். வெடிகாலமே போயிட்டா நாம மொதல் முப்பதுக்குள்ள வந்துட்லாம். அரெ பவுனு தங்கம் வாங்கினா அரைக்கால் கிராம் தங்கம் இனாமாக் குடுடுப்பாளாம் மொதல்லெ வர முப்பது பேருக்கு’ ன்னு. இதெ ராத்திரியே ஒங்க கிட்டெ சொல்லணும்னு இருந்தேன்னா. மறந்து போச்சு. ஒங்களெ எழுப்பி சொல்லீட்டுப் போகலாம்னா ஒங்களுக்கு தான் தூக்கத்துலெ எழுப்பினா பொல்லாத கோபம் வருமேன்னா. அதான் இதெ எழுதி வெச்சூட்டுப் போறேன். காப்பி டிகாக்ஷன் போட்டு வெச்சிருக்கேன். பாலெக் காச்சி சூடாக் காப்பி கலந்து குடிங்கோன்னோ. இன்னிக்கி ஒரு நாள் ஆபீஸ் போற வழிலே ஒரு ஓட்டல்லெ டிபன் சாப்டூடுங்கோ. மத்தியான் சாபாடு ஆபீஸ் கேன்டீன்லெ சாப்டூடுங்கோ. சரியா? மறதி ரொம்ப ஜாஸ்தியாப் போச்சுன்னா எனக்கு. இன்னோண்ணு சொல்ல மறந்தூட்டேன் பாருங்கோ. பவுனு வாங்க எங்கிட்டெ ஏதுன்னா காசு? அதான் ஒங்க பர்சுலேந்து பணம் எடுத்துண்டு போறேன்னா. அனேகமா நீங்க இதெப் படிக்கச்சே நான் கடெய்க்குள்ளெ போயிருப்பேன்.” இப்படிக்கு உங்கள் மனைவி பங்கஜம்.
அடிப் பாவி இப்பொ நான் ஆபீசுக்குப் போறத்துக்கு பஸ் சார்ஜுக்கு என்னடி பணுவேன்? இதுலெ டிபனும் மீல்ஸும் வெளிலெ எப்டிடீ சாப்பிடுவேன்? அங்க ஒங்க அப்பாவாடி ஓட்ட்லும் கேன்டீனும் வெச்சு நடத்திண்டு இருக்கார்?
எந்தப் பாவி கண்டு புடிச்சானோ இந்த அக்ஷய திருதியையெ? அவன் மாத்திரம் என் கண்ணுலெ படட்டும் சினிமாலெ வர ஹீரோ வில்லனெக் கொல்லறா மாதிரி அவன் கழுத்தெ இந்தக் கையாலெ நெரிச்சே கொன்னூடுவேன். பாவி... பாவி... என்னெ இந்தக் கத்திரி வெய்யலுலெ ஆபீசுக்கு நடக்க வெச்சூட்டானே அதுவும் காலி வயத்துலெ. இருந்த ஒரு கிழிசல் கொடெயெயும் எதுத்த வீட்டு தண்டராமன், சாரி கோதண்டராமன், எரவல் வாங்கிண்டடு போனான் போன வாரம். போனவன் போனவன்தான். திரும்பக் கொண்டே வரலெ கொடெயெ. லீவு போடலாம்னா நேத்தே சொல்லி இருந்தாரு மேனேஜரு, “நாளெய்க்கி மும்பைலேந்து பெரிய மேனேஜரு வராரு. யாரும் லீவு போடக் கூடாது” ன்னு.
ஆண்டவா.......! ஒனக்குக் கருணைனு ஒண்ணு கெடெயவே கெடெயாதா?
நடராஜன் கல்பட்டு
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














