தாயென்று கும்பிடடி பாப்பா
- அமெரிக்கா - 30
கீதா சாம்பசிவம்
லிங்கனும் அவருடைய சகாக்களும் எப்படியாவது தென் மாநிலத் தலைவர்களையும், விடுதலை செய்யப் பட்ட கறுப்பின மக்களையும் ஒன்று சேர்த்து வைப்பதோடு அல்லாமல் தென் மாநிலங்களையும் அமைதியான வழிக்குத் திருப்பப் பாடுபட்டனர். லிங்கனின் கட்சிக்குள்ளேயே அதற்கு எதிர்ப்பும் இருந்து வந்தது. ஆனால் நாட்டை ஒன்று சேர்க்க லிங்கன் முழு முயற்சி எடுத்துக்கொண்டதோடு அதில் உறுதியாகவும் இருந்தார். இதற்கென ஒரு திட்டத்தைச் செயல்படுத்தவும் நினைத்தார். விரைவில் தேர்தலை நடத்தினார். உள்நாட்டு யுத்தத்தின் போது பாதிக்கப் பட்டவர்களுக்காக மன்னிப்பையும் கேட்டார். தென் மாநில மக்களோ, தலைவர்களோ, சண்டையில் கலந்து கொண்டு இருந்தாலும் அவர்களை மதிப்புடன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் குடிமகனாகவே மதிப்பதாயும், எவரையும் சிறையில் போடப் போவதில்லை எனவும், கூறினார். விசுவாசப் பிரமாணப் பத்திரம் ஒன்றையும் கொடுத்தார்.
தென் மாநில மக்களோ தங்கள் தலைவர்களின் வீழ்ச்சியிலும் நிர்வாகம் ஸ்தம்பித்துத் தாங்கள் ஏற்படுத்திய அரசு வீழ்ந்ததையும் எவ்வாறேனும் சரி பண்ணும் முயற்சியில் ஈடுபட நினைத்தனர். ஆகவே லிங்கன் மிகவும் கஷ்டப் பட்டு அவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வந்தார். டெனிசி மாநிலத்துக்கும், ஆர்கன்சாஸ் மாநிலத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருந்தது. லிங்கனால் நியமிக்கப் பட்ட ராணுவத் தளபதிகளான ஜெனரல் ஜான்சனும், ஜெனரல் ப்ரெடரிக் ஸ்டீல் என்பவரும் அந்த இரு மாநிலங்களிலும் கவர்னராக நியமிக்கப் பட்டனர். லூசியானாவில் ஜெனரல் நாதானே பாங்க்ஸ் என்பவரும் நியமிக்கப் பட்டார். லூசியானாவை ஒரு தனி மாநிலமாக மாற்றவும் ஒப்புக்கொள்ளப் பட்டது. ஆனால் அடிப்படை வாதிகளால் லிங்கன் கடுமையாக விமரிசிக்கப் பட்டார். அதே சமயம் ஜனநாயகத்தை ஆதரிக்கும் முற்போக்குவாதிகள் லிங்கன் ராணுவத்தைக் கொண்டு வந்து ஆட்சி நடத்தி வருவதாயும், அவருடைய கட்சியின் கொள்கைககள் சரியாக இல்லை என்றும், குறை கூறினார்கள். ஆனால் அடிப்படை வாதிகள் தாங்களாகவே ஒரு சட்டத்தைக் கொண்டு வர முற்பட தன் அதிபர் பதவிக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி லிங்கன் அதைத் தோற்கடித்தார். இதனால் எல்லாம் அவருக்கு எதிர்ப்பு அதிகம் இருந்து வந்தது.
ரிச்மாண்ட் கடைசியில் தான் லிங்கனுக்கு அடி பணிந்தது. லிங்கன் அந்த வெற்றியைக் கொண்டாடத் தாமே நேரே சென்றார். ஐக்கிய அமெரிக்க யூனியனின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் அங்கே தென் மாநிலங்கள் அதிபராக நியமித்திருந்த ஜெபர்சன் டேவிஸின் ஆசனத்தில் அமர்ந்து தன் வெற்றியையும் அமெரிக்க மாகாணங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து கொண்டது என்பதையும் நிரூபித்தார். அனைத்து மாநிலங்களும் ஒரே அதிபரான தனக்குக் கீழேயே இருப்பதையும் இதன் மூலம் நிரூபித்தார். அங்கே கறுப்பின மக்களால் பெரிதும் வரவேற்கப் பட்டார். ஒரு காவியக் கதாநாயகனைப் போலச் சித்தரிக்கப் பட்டார். போரில் தோற்ற தென் மாநில மக்கள் அனைத்தையும் மறந்து தாங்களாகவே முன்னேற்றத்தில் ஈடுபட வேண்டும் எனவும் கூறினார். இவை இத்தனையையும் முழு மூச்சுடன் செய்ததாலோ என்னமோ லிங்கனுக்குத் திடீரென அதிக வயதானமாதிரி தோற்றமளித்தார். சின்னஞ்சிறு தாடியும் அவர் தாடையை அலங்கரித்தது.
ஆப்ரஹாம் லிங்கனாலேயே அமெரிக்காவின் நன்றி சொல்லும் நாள் ஒரு தேசீய விடுமுறையுடன் கூடிய நாளாக அறிவிக்கப் பட்டது. அதற்கு முன்னர் அந்த நாள் அவரவருக்கு இஷ்டப்பட்ட தினம் ஒரு மதச்சார்புள்ள புனிதமான தினமாய்க் கொண்டாடப் பட்டு வந்தது. 1863-ம் ஆண்டு தான் நவம்பர் மாதம் கடைசி வியாழக்கிழமையை நன்றி அறிவிக்கும் நாளாக மாற்றி அன்று நாடு முழுதுக்கும் விடுமுறையும் அறிவித்தார் லிங்கன். லிங்கனுக்குச் சிலகாலம் பின்னரே, அது தேதி மாற்றப் பட்டு நவம்பர் மாதத்தின் நாலாவது வியாழக்கிழமை என மாற்றப் பட்டது.
அதே வருடம் கெட்டிஸ்பர்கில் பேசிய லிங்கன், உள்நாட்டு யுத்தம் மக்களுக்குப் பெரியதொரு படிப்பினையைக் கொடுத்தது எனவும், ஒற்றுமையாய் இருப்பதின் அவசியத்தையும் சுட்டிக் காட்டியதாயும் கூறினார். இந்த யுத்தம் வந்தது நன்மைக்கே என்ற லிங்கன் இதன் மூலம் மக்கள் தங்கள் பலத்தைத் தெரிந்து கொண்டு எவராலும் அசைக்க முடியாததொரு புது பலம் பெற்று வலிமையான குடியரசை அமைக்க முடிந்தது என்றும் கூறினார். இதில் தங்கள் இன்னுயிரைத் துறந்தவர்களின் மூலம் சுதந்திரத்தின் ஆழமான உள்ளர்த்ததையும், ஜனநாயகம் ஒரு நாட்டிற்கு எவ்வளவு அவசியம் என்பதையும், எல்லாவற்றுக்கும் மேல் ஒவ்வொரு குடிமகனும் சமம் என்பதையும் நிரூபித்துவிட்டது என்றும் கூறினார். மேலும் அவர் ஒரு உண்மையான குடியரசு நாடு மக்களால், மக்களுக்காக, மக்களாலேயே ஆளப்படும் எனவும், அதுவே உண்மையான குடியரசு என்றும் கூறினார். இதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு அவருடைய விலை மதிக்க முடியாத உயிராகும்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















