தாயென்று கும்பிடடி பாப்பா
- இரட்டைக் கிளவி ஒத்தைக் கிளவி
Natarajan Kalpattu
இரட்டைக் கிளவி
தமிழாசிரியர் தடதடவென வகுப்பினுள் நுழைந்து கரும்பலகையில் எழுதினார், “மன்னன் சிபி நந்தவனத்தில் உட்கார்ந்திருந்தான். படபட வெனத் தன் சிறகுகளை அடித்துக் கொண்டு புறா ஒன்று அவன் மாடியில் வந்து விழுந்தது” என்று.
“முருகா, நீ சொல் இரெட்டைக் கிளவி எங்கே?”
“அய்யா, நான் பாக்கலீங்க அய்யா.”
“சண்முகம், நீ சொல்லு இரெட்டைக் கிளவி எங்கே?”
“அய்யா, நான் பள்ளிக்கு வாரச்சே ஒத்தெ கெளெவியெத்தான் அய்யா பாத்தேன்.”
“பாண்டி, நீ சொல்லு.”
“தேடிக் கண்டு புடிச்சு நாளெக்கி சொல்றேன் அய்யா.”
ஆசிரியர் மீண்டும் எழுதினார் கரும் பலகையில், “அடி அடி யென்று அடித்துச் சொல்லிக் கொடுத்தால் தான் உங்களுக் கெல்லாம் புரியும் என்று நினைக்கிறேன்” என்று.
வகுப்பில் இருந்த அனைவரும் ஒரே குரலில், “அய்யா அடிக்க வேணாம் அய்யா. ஊரு பூராத் தேடி ஒங்க முன்னாடி கொண்டாந்து நிறுத்துறோம் அய்யா இரெட்டைக் கிளவியெ நாளைக்கே.”
“நேத்துதானே சொல்லிக் கொடுத்தேன். தடதட, படபட. என்று வரும் சொற்களுக்கு இரெட்டைக் கிளவி என்று பெயர் என்று? அச்சொற்களைப் பிரித்தால் பிரித்த சொற்களுக்குப் பொருள் இருக்காது. அதே சமயம், “அடி அடி என்று அடித்து” என்பதில் வரும் அடி அடி என்பது இரெட்டைக் கிளவி இல்லை. அதற்குள் மறந்து போய் விட்டாதா? ஏன் இப்படித் திரு திரு வென்று முழிக்கிறீர்கள்?”
“அய்யா, இதை இனி ஒரு நாளும் மறக்க மாட்டோம் அய்யா.”
“சரி. முருகா, இரெட்டைக் கிளவிக்கு இப்பொ நீ ஒரு உதாரணம் சொல்லு.”
“அய்யா, நீங்க கையிலெ பிரம்பெ வெச்சு கிட்டு என்னெ, ‘இரெட்டைக் கிளவி எங்கே” ன்னு கேட்டப்போ பயத்துலெ என் ஒடெம்பெல்லாம் கிடுகிடுன்னு ஆடிச்சையா.”
“சரியான உதாரணம். உட்கார்.”
இதைப் படித்து விட்டு யாரும் என்னைப் பிடி பிடி யென்று பிடிக்க வந்திடாதீர்கள். நான் கற்ற தமிழ் இலக்கணத்தில் என் மனதில் நிலைத்து நின்றது இது ஒன்றுதான்!
ஒத்தைக் கிளவி
நேத்து ரெட்டெக் கிளவியப் பாத்தீங்க. ஒரு ஒத்தெக் கிளவியெப் பாக்க வாணாம்?
“டேய் நடராஜா, போய் கொஞ்சம் ஆட்டாம் புழுக்கெ பொறுக்கிண்டு வாடா.”
“ஆட்டாம் புழுக்கெ எதுக்கு பாட்டி?”
“பொறுக்கிண்டு வா சொல்றேன்.”
வேறு வழி? வீட்டிற்கு எதிரே இருந்த காலி இடங்களில் இருந்து பொறுக்கி வந்தேன் கையளவு ஆட்டாம் புழுக்கை.
“இது எந்த மூலைக்குடா காணும்? ஒரு படி அளவுக்காவது வாணாம்? போய் இன்னும் பொறுக்கிண்டு வாடா.”
அடுத்த ஐந்து நாட்களுக்கு என் கடன் பணி செய்து கிடப்பதே, அதான் ஆட்டாம் புழுக்கை பொறுக்கி வருவதே.
பொறுக்கி வந்த புழுக்கைகளை வெய்யிலில் உலர்த்தினாள் பாட்டி. ஓரளவுக்கு சேர்ந்த உடன் அவற்றை உரலில் போட்டு இடித்துப் பொடியாகினாள்.
“பாட்டீ…. எதுக்கு பாட்டி இந்த பொடி?” இது என் கேள்வி.
“லேகியம் பண்ணடா. ஆட்டாம் புழுக்க லேகியம் ஒடம்புக்கு நல்லதுடா.”
நானும் நம்பினேன் அவள் பேச்சை. பின் நாட்களில் தெரிந்து கொண்டேன் ஆட்டாம் புழுக்கை ரோஜாச் செடிக்கு நல்ல உரம் என்று. (பங்களூரில் செடிகளுக்கென்று குதிரைச் சாணப் பொடி விற்கிறார்கள்.)
பாட்டி தன் திரேதா யுகத்து இரும்புப் பெட்டியை பேக் செய்ய ஆரம்பித்தாள்.
ஊரில் இருந்து பாட்டி வந்த போது பெட்டியில் பாதி அளவுக்குப் பொரிவிளங்காய் உருண்டை, முறுக்கு, சீடை, அதிர்சம் இவை இருந்தன. இப்போது பெட்டியில் பாதி காகிதப் பொட்டலத்தில் ஆட்டாம் புழுக்கைப் பொடி. மீதியில் இரண்டு நார் பட்டுப் புடவைகள், ஒரு மலையாளத் துண்டு. பட்சணங்களுக்காகக் காலி இடம். இனிமேல் தான் அம்மா செய்ய வேண்டும் அவற்றை.
“தொரெசாமீ (அப்பிடித்தான் கூப்பிடுவாள் பாட்டி என் அப்பாவை), “பாஸ் வாங்கிண்டு வாடா. நான் கல்பட்டு போகணும்.” (என் அப்பா ரயில்வேயில் உயர் அதிகாரி. பயணம் செய்யப் பாஸ் உண்டு பாட்டிக்கும் கூட.)
“அம்மா இப்பொ வாண்டாமே. மழெ காலம் ஆரம்பிச்சுடுத்து. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுப் போகலாம்மா.”
“இல்லெடா. நான் ஒடனே போகணும். அங்கேயும் கொழந்தேள்ளாம் பாட்டி எப்போ வருவான்னு ஆசெயாக் காத்திண்டு இருப்பாளோல்யோ?”
“சரி. இன்னிக்கி வாங்கிண்டு வறேன். நீ ஒண்ணெ நெனெச் சுண்டுட்டேன்னா உட மாட்டியே.”
பாஸும் வந்தது. பாட்டியும் கிளம்பினாள் ஊருக்கு.
மூன்று நாளாகியும் கல்பட்டிலிருந்து கார்டு வரவில்லை பாட்டி பத்திரமாகப் போய்ச் சேர்ந்ததாக. அன்றிரவு வாசலில் ஒற்றை மாட்டு வண்டி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து பாட்டி இறங்கினாள் தன் பெட்டியோடு.
“என்னம்மா என்னாச்சு?”
“தொரெசாமீ நான் இங்கேந்து கெளெம்பினேனா. வண்டி விருத்தாசலத்தெத் தாண்டிச்சு. திடீல்னு நிறுத்தினான் வண்டியெ. கார்டு எறங்கி எஞ்சின் கிட்டெ போயி ஏன் வண்டியெ நிறுத்தீட்டேன்னு கேட்டிருக்கணும். ஜனங்களும் கொஞ்சம் பேரு இறெங்கிப் போனா எஞ்சின் கிட்டெ.
அங்கேருந்து வந்தவாள்ளாம் ஒரத்தி சொல்லிண்டே போனா, “வண்டி மேலெ போகாது. லயனுக்கு மேலெ ஒரடி தண்ணி ஓடறது. அது நின்னாத்தான் மேலெ போகும்னு. ராத்திரி பூரா வண்டி அங்கெயே நின்னிண்டு இருந்துது. ஒடிண்டிருந்த பேனும் வெளெக்கும் மங்கலாச்சு. சில மணிக்கப்புறம் நின்னும் போச்சு.
போது விடிஞ்சதும் வண்டி விருத்தாசலத்துக்கே திரும்பப் போறதுன்னான். திலுப்புடா வண்டியென்னான். வண்டி விருத்தாசலம் போயி ஸ்டேஷன்லெயே நின்னிண்டு இருந்து ஒரு நாள் பூரா. வண்டிலெ இருந்தவாள்ளாம் எறெங்கி ஸ்டேஷன்லெ கெடெச்ச பழம், இட்டிலி, தயிர்சாதம்னு வாங்கித் தின்னா. நான் சாப்டலாமோ அந்தக் கண்றாவியெ எல்லம்? கூஜாலெ இருந்த தண்ணியெக் குடிச்சூட்டு இன்னிக்கி ஏகாதசின்னு நெனெச்சிண்டு இருந்தேன்.
மறு நாள் சொன்னான் வண்டி விருதாசலத்துலேந்து கடலூரு போயி அங்கேந்து விழுப்புரம் போகும்னு.
வண்டி கொஞ்ச தூரம் போச்சு. அப்பறம் வேகம் கொறஞ்சு நின்னூடுத்து. வண்டி இதுக்கு மேலெ போகாதூன்னான். அங்கெ லயனெயேக் காணுமாம். வண்டியெத் திலுப்புடான்னான். வண்டி விருத்தாசலத்துக்கே வந்துது. லயனுக்கு மேலெ ஓடிண்டு இருக்கற தண்ணி கொறெஞ்சதும் விழுப்புரம் போகும்னான்.
இன்னிக்கி சாயங்காலம் மறுபடி திலுப்புடா வண்டியென்னான். வண்டி திருச்சிக்கே போகுனான். அதான் இங்கெ வந்து சேந்தேன்” தன் கதெயெ முடித்தாள் பாட்டி.
“அம்மா, நான் அப்பொவே சொன்னேன் மழெகாலம் முடிஞ்சதும் போகலாம்னு. நீதான் கேக்கலெ.”
“அம்மா கை காலெ அலெம்பிண்டு வந்து ஒரு வாய் சாப்பிடுங்கோ. பாவம் மூணு நாளாப் பட்டினி நீங்க” என்றாள் அம்மா.
இது தான் ஒரு ஒத்தைக் கிளவியின் உண்மைக் கதை!
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















