தாயென்று கும்பிடடி பாப்பா
- ஊத்துக்காடு
இணையப் பாட்டி
அன்பு குழந்தைகளே,
ஜன்மாஷ்டமி என்பது ஸ்ரீ கிருஷணனின் பிறந்த நாள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தக் கண்ணனே ஒருவரைப் பெரிய கவியாக்கி இருக்கிறார். அவரே குருவும் ஆனார். மன்னார்குடிக்கு மறு பெயர் தக்ஷிண துவாரகா. ராஜ மன்னார்குடி என்றால் ஸ்ரீ ராஜகோபால ஆலயம் தான் நம் நினைவுக்கு வரும். அந்தச் சிறப்பான ஊரில் தான் ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கட கவி அவதரித்தார். அவரது காலம் பதினெட்டாம் நூற்றாண்டாகும். அவரது தகப்பனார் திரு ராமசந்தர வாதூலர், தாயார் திருமதி கமலா நாராயணி அம்மாள். ஊத்துக்காடு வெங்கட கவிக்கு பெற்றோர்களுடன் மகிழ்ந்து வாழும் பாக்கியம் இல்லாமல் சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டார். அவரது சித்தி ஊத்துக்காடில் வசித்து வந்தார். அவர் இந்தப் பாலகனுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்தார். ஊத்துக்காட்டில் ஒரு கோயில் இருந்தது. அதில் அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் எல்லோருக்கும் அருள் புரிந்தார். அந்த ஆலயம் அருகில் ஒரு காளிங்க மடு இருந்தது. அதற்கு நடுவில் சுயம்பூவாகத் தோன்றிய காளிங்கமூர்த்த்யான கண்ணன் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தார்.
சோழ மன்னர் இந்த ஆலயத்தைப் பார்த்துவிட்டு மயங்கி அதை அழகாகக் கோபுரத்துடன் கட்டினார். ஊத்துக்காடு வெங்கட கவியின் பெயர் முதலில் வெங்கட சுப்பையர் என்று இருந்தது. சிறு வயதிலேயே இசை என்றால் அவருக்கு உயிர். தனக்கு ஒரு இசைகுரு தேடிக்கொண்டிருந்தார். பலரை அணுகியும் அவருக்கு ஒருவரும் இசை சொல்லித்தர முன் வரவில்லை. மனம் ஒடிந்து போனார். ஒரு நாள் அந்தச்சிறுவனான வெங்கடசுப்பு, "கண்ணா எனக்கு நீயே குருவாக மாட்டாயா? ஒருவரும் எனக்குச் சங்கீதம் கற்றுக்கொடுக்க முன்வரவில்லை. நான் உன் அழகைப் பற்றி எப்படிப் பாடுவேன். உன்னைப் பக்தியுடன் பாட இசைஞானம் தருவாயா?" என்று மனம் வருந்தி வேண்டிக்கொண்டார். "கலீர் கலீர்" என்று சலங்கை ஒலி கேட்டது. அந்தச் சத்தம் வந்த இடத்திற்கு நகர்ந்தார் வடகிழக்குப் பக்கம் ஒரு துளசிச் செடியின் அருகில் ஒலி கேட்டவுடன் அங்கு போனார். அங்குக் கண்ணன் தரிசனம் கண்டார். அவருக்குக் கண்ணன் ஞானத்துடன் இசை ஞானத்தையும் அளித்து விட்டார். கண்ணனே இசைக்கும் குருவானார்.
உடனே பாடல்கள் பிரவாகம் போல் கொட்டத்தொடங்கின. அன்றிலிருந்து கண்ணனே அவர் வாழ்க்கை ஆனது. அவர் செய்யும் குரும்பைக் கண்டு அனுபவித்தார், அவருக்கு யசோதை எண்ணெய் ஸ்னான்ம் செய்வதைப் பார்த்து மகிழ்ந்தார். அவர் உறியிலிருந்து வெண்ணெய் திருடி உண்பதைக் கண்டு களித்தார். காளிங்கன் என்ற பாம்பின் மேல் நின்று ஆடும் காட்சியைக் கண்டார். இதே போல் பல பாடல்கள் ஊற்றுப்போல் வந்தன. "அலைப்பாயுதே கண்ணா" என்ற பாடலும் "பாலவடியும் முகம்", "நீரதசம நீலகிருஷ்ணா", "தாம் ததீம் ததாம்" போன்ற பாடல்களூம் மிக அருமைதான். அவர் தினம் பாடப்பாட அவர் தொடையில் பாலகிருஷ்ணன் வந்து அமருவதை உணர்வாராம். அதிலிருந்து அவர் தொடையில் தாளம் போடுவதை நிறுத்திவிட்டார்.
அவருக்கு கிருஷ்ண தரிசனம் துலாமாதம் மக நட்சத்திரத்தில் கிடைத்தது. ஒவ்வொரு பாட்டிலும் கண்ணன் நர்த்தனம் ஆடுவதால் ஜதியும் ஸ்வரமும் பின்னிப்பின்னி வரும். இவர் கணபதி மேலும் பாடி இருகிறார், "ஆனந்த நர்த்தன கணபதிம் பாவையே" "சிதானந்த நர்த்தன கண்பதி" அவற்றுள் அடங்கும். அவர் பாடியது ஆத்ம திருப்திக்காகவே இருந்ததால் அவர் ஒரு சிஷ்யரையும் தயாரிக்கவில்லை. அவர் வம்சத்தைச் சேர்ந்த உறவினர்கள் அவைகளைப் பிரபலப் படுத்தினர். ஸ்ரீ நீடாமங்கலம் கிருஷணமூர்த்தி பாகவதர் இந்தப் பாடல்களைச் சுவடிகளிலிருந்து எடுத்துத் தனது கதாகாலட்சேபத்தில் உபயோகப் படுத்தினார்.
திரு மகராஜபுரம் சந்தானம் அவர்கள் இவரது பாடல்களை ஒலிநாடாவில் பாடியிருக்கிறார். இன்று பல கச்சேரிகளில் இவரது பாடல்களைக் கேட்க்கலாம். இவரது காளிங்க நர்த்தனக் கோயில் 1988ல் கும்பாபிஷேகம் பெற்று மேலும் சிறந்து விளங்குகிறது.
அன்புடன் அம்மம்மா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















