அறூபத்து மூவர் - 2
பிள்ளையார் பாட்டி
அருந்தொண்டாற்றிய நாயன்மார்கள்
சங்க காலத்தில் நம் தமிழ் நாட்டில் சிவ வழிபாடும், திருமால் வழிபாடும், வேலன் வழிபாடும் இருந்தே வந்துள்ளது. பொதுவாக அப்போதைய மக்கள் இயற்கையை ஒட்டிய வாழ்க்கையை வாழ்ந்தனர் என்றே சொல்லப் பட்டாலும், சங்கப் பாடல்களில் சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, வேலன் என்ற முருகன் வழிபாடு பற்றிக் குறிப்பிடப் படுகின்றது. இல்லற வாழ்க்கையையும், துறவற வாழ்க்கையையும் பற்றிச் சேர்ந்தே பேசும் பரிபாடலில் திருமாலுக்கு மட்டுமே 24 பாடல்கள் இருந்ததாயும், வேலவனுக்கு 31 பாட்டுக்கள் என்றும், கொற்றவைக்கு ஒரு பாடலும் இருந்ததாய்த் தெரியவருகிறது. முருகனை செவ்வேள் என்றே குறிப்பிட்டிருக்கின்றனர், சங்க காலத்து மக்கள். கடவுள் வாழ்த்துப் பாடல்களும் பரிபாடலில் இடம் பெற்றிருக்கின்றது. மதுரையைப் பற்றிய பரிபாடல் பாடல் ஒன்றில் நகரின் வர்ணனை பற்றிக் குறிப்பிடும்போது திருமாலின் வயிற்றில் முளைத்த தாமரைப் பூப் போன்ற அமைப்பு உள்ள நகரம் எனப் பொருள் படும்படியாக ஒரு பாடல் உள்ளது.
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவோடு புரையும் சீறார் பூவின் இதழகத்து
அனைய தெருவம், இதழகத்து
அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்"
மாயோன்=திருமால், கொப்பூழ்=வயிறு சீறாப்பூவின் இதழகத்து அனைய தெருவம் = பூவின் இதழ்கள் போன்ற தெருக்கள்
திருமாலின் வயிற்றில் இருந்து முளைத்த தாமரைப் பூவின் இதழ்கள் போன்ற அடுக்கடுக்கான தெருக்களையும்,
இதழகத்து அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில் = பூவின் நடுவே உள்ள மொட்டுப் போல அண்ணலின் கோயில் உள்ளதாயும் வர்ணனை செய்கின்றது. இன்னும் வேதத்தின் முக்கியத்துவமும் அதில் பேசப் படுகின்றது, இறைவனே அனைத்தும் என்று சொல்லும் பாடல்களும் இடம் பெற்றிருந்திக்கின்றன. ஆனால் பின்னர் வந்த களப்பிரர் காலத்தில் இவை எல்லாமே இருட்டடிப்புச் செய்யப் பட்டு பெளத்தப் பள்ளிகளும், சமணப்பள்ளிகளும், பெளத்த, சமணக் கோட்பாடுகளும் தோன்ற ஆரம்பித்து அவற்றுக்கு ஏற்ப நீதியைச் சொல்லும் நூல்கள் தோன்றின.
அப்போது சைவ சமயத்தை வேரூன்ற வைக்கத் தோன்றிய அடியார்களில் பலரும் பக்தி மணம் கமழும் தமிழ்ப் பாடல்களைப் பாடி மக்கள் மனதில் மீண்டும் சைவத்தை வேரூன்றினார்கள். சைவம் எப்போது தோன்றியது என்றே சொல்ல முடியாத ஒன்று. மொகஞ்சதோரோ, ஹரப்பா நாகரீகச் சின்னங்களைத் தோண்டி எடுத்த ஆய்வாளர்கள் அதில் கண்ட சில சின்னங்கள் மூலம் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே சிவ வழிபாடு இருந்து வந்திருப்பதாய்த் தெரிய வருகிறது. பின்னர் வந்த நாயன்மார்கள் தங்கள் பக்திப் பெருக்கினால் அவற்றைச் செம்மைப் படுத்தினார்கள். இந்த நாயன்மார்கள் பாடிய பாட்கள் எல்லாம் திருமுறை என்று சொல்லப் படுகின்றது. திருமுறைகள் பாடிய நாயன்மார்களைப் பற்றி அறியும் முன்னர் அந்தத் திருமுறை பிறந்த கதையைத் தெரிந்து கொள்வோம், அடுத்த பாகத்தில்.
கீதா சாம்பசிவம்
தொடரும்...
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















