அறூபத்து மூவர் - 4
பிள்ளையார் பாட்டி
அருந்தொண்டாற்றிய நாயன்மார்கள்
விநாயகருக்கு வழிபாடுகள் செய்து, அவரை உணவருந்த வைத்துப் பார்த்து மகிழ்ந்திருந்த நம்பிக்குப் பள்ளி செல்ல வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது. ஆசிரியர் என்ன சொல்வாரோ என்ற கலக்கமும் கூடவே எழுந்தது. தாமதமாய்ப் பள்ளி சென்றார் நம்பி. அங்கே ஆசிரியர் இவரைக் கண்டதும் கடுகடுத்தார். "ஏன், தாமதம்?" என வினவ, நம்பி சொல்கின்றார், "விநாயகரின் வழிபாட்டில் நேரம் ஆயிற்று!" என்று. " நீ என்ன வழிபாடு செய்தாய்?" என ஏளனமாய் ஆசிரியர் கேட்க, "ஐயா, நான் என் தந்தை சொல்லிக் கொடுத்தாற்போலவே செய்தேன். கடைசியில் பிரசாதத்தை இறைவனுக்கு அர்ப்பணித்ததும், அவர் நேரில் வந்து உண்ணத் தாமதம் ஆயிற்று, அதானாலேயே பள்ளிக்கும் தாமதம் என்று உரைக்கின்றார். ஆசிரியர் இன்னும் சினந்தார். "பொய் வேறு சொல்ல ஆரம்பித்து விட்டாயா?? நம்பி, இன்று உன் தந்தை வருவார் இல்லையா? அவரிடம் நான் பேசிக் கொள்கின்றேன், நீ வீட்டுக்குச் செல்வாய்," என்று நம்பியை அனுப்பி விடுகின்றார். நம்பியோ மீண்டும் கோயிலுக்குச் செல்கின்றார். விநாயகனையே வேண்டுகின்றார்.
"வேழ முகத்தோனே! நான் செய்த தவறுதான் என்ன? ஏன் என்னை இப்படிச் சோதிக்கின்றாய்? ஆசிரியர் இன்று கற்றுக் கொடுக்காமல் அனுப்பி விட்டாரே? தந்தை வந்து இன்று என்ன கற்றாய் என்று கேட்கும்போது என்ன சொல்வேன்?" என்று தவிக்கின்றார். நம்பி அறியாமலேயே விநாயகன் அவருக்கு அருள் புரியத் தீர்மானித்தார். மாலையும் வந்தது, தந்தையும், தாயும் வந்தனர். நம்பியைப் பார்த்தனர். இனம் புரியாத ஒளி வீசிற்று அவர் முகத்தில். தந்தையும், தாயும் அதைக் கண்டு பிரமித்தனர். "நம்பி, என்னப்பா நடந்தது? கோயிலில் வழிபாடுகள் செய்தாயா? பள்ளிக்குச் சென்றாயா? எனத் தந்தை வினவ, நம்பி, "ஆம், தந்தையே, கோயிலில் வழிபாடுகள் செய்தேன். விநாயகர் அமுது உண்ணச் சற்றே தாமதம் ஆயிற்று. ஆகையால் பள்ளிக்குச் செல்லவும் தாமதம் ஆயிற்று. ஆசிரியர் கோபித்தார்" என உண்மையை உரைக்க, மகன் பள்ளிக்குச் செல்லாதமைக்கு ஏதோ பொய்க்காரணங்கள் சொல்கின்றான் என நினைத்த பெற்றோர். மிகக் கடுமையாக அவரைக் கோபித்தனர். "என்ன விநாயகர் அமுது உண்ண தாமதமா? என்னப்பா இது? பள்ளிக்குச் செல்லாமல் இருக்க இது ஒரு காரணமோ?" எனத் தந்தை வினவ, "இன்று ஒன்றுமே கற்கவில்லையா? எனத் தாய் கேட்க, நம்பியோ, மடமடவெனப் பாடல்களாய்ப் பொழிய ஆரம்பித்தார். தந்தையும், தாயும் திகைத்து நிற்க, நம்பியோ, "இதுவும் விநாயகன் அருள் போலும்!" என்றே சொல்கின்றார்.
அச்சமயம் அங்கே வந்த பள்ளி ஆசிரியரும் நம்பி பள்ளிக்குத் தாமதமாய் வந்ததைச் சொல்ல, நம்பியோ இறைவன் மீது பாடல்கள் பொழிவதில் முனைந்திருக்க ஆசிரியரும் திகைக்கின்றார். மறுநாள் விடிகின்றது. தந்தைக்கு நேற்று நடந்ததாய்ப் பையன் சொல்வது உண்மையா எனப் பார்க்க எண்ணம் கொண்டார். ஆகவே முதல் நாள் போலவே அன்றும் நம்பியைக் கோயிலுக்கு அனுப்பி வைக்கின்றார். நம்பி உற்சாகமாய்ச் செல்கின்றார் கோயிலுக்கு. விஷயம் தெரிந்து பள்ளி ஆசிரியரும் வருகின்றார். தந்தையும் பள்ளி ஆசிரியரும் மறைந்திருந்து தன்னைக் கவனிப்பதை உணராமல் நம்பி விநாயகருக்குப் பூஜைகள் செய்ய ஆரம்பிக்கின்றார். வழிபாடுகள் முடிந்து பிரசாதத்தை விநாயகரின் முன்னே வைக்கின்றார் நம்பி. "விநாயகா, வா, வா, வந்து எடுத்துக் கொள், உன் பிரசாதத்தை, சீக்கிரம், வா, இன்றாவது நான் நேரத்தோடு பள்ளி செல்ல வேண்டாமா?" என்றார் நம்பி. விநாயகரும் வந்தார். பிரசாதத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தார். மறைந்திருந்து கவனித்த தந்தைக்கும், ஆசிரியருக்கும் பிரசாதங்கள் மறைவது மட்டும் தெரிந்தது. ஆனால் யாரையும் கண்ணால் காண முடியவில்லை. திகைத்தனர்.
கீதா சாம்பசிவம்
தொடரும்...
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















