அறூபத்து மூவர் - 6
பிள்ளையார் பாட்டி
அருந்தொண்டாற்றிய நாயன்மார்கள்
மன்னன் என்ன செய்யலாம் என யோசித்தான். அவன் மனதில் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. தேவார ஆசிரியர்கள் தாங்கள் மூவரும் சேர்ந்து வந்தால் ஒழிய கதவைத் திறக்கக் கூடாது என்று தானே சொல்லிப் போனார்கள்? மன்னன் மனம் தளராமல், தேவாரப் பெருமக்கள் மூவருக்கும் பெருவிழா எடுக்கச் செய்தான். அவ்விழாவில் மூவரின் சிலைகளுக்கும் பல்வேறு அலங்காரங்கள், வழிபாடுகள் செய்யப் பட்டன. மூவரின் திருவுருவங்களும் திருவீதிகள் வழியாகத் தில்லை நகரைச் சுற்றிவரச் செய்தான். பின்னர் அம்மூர்த்தங்கள் ஆலயத்தில் எழுந்தருளச் செய்தான். நம்பியும், மன்னனும், தில்லைவாழ் அந்தணர்கள் புடைசூழ திருக்கோயிலை அடைந்தனர். தேவார ஆசிரியர் மூவரின் திருவுருவச் சிலைகள் தேவாரப் பதிகங்கள் அடைத்து வைக்கப் பட்ட அறையின் முன் வந்து நிறுத்தப் பட்டன.
தலையில் பிறை சூடிய எம்பெருமானை மனதில் தியானித்தவண்ணம் அவரை மனதில் இருத்தி, நம்பி, பிரானிடம், "அம்மையே, அப்பா, தேவாரப் பதிகங்கள் பாடிய மூவரும் வந்துள்ளனர். தாழ் திறந்து பதிகங்களைக் காட்டி எமக்கு அருள் புரியுங்கள்" என வேண்டினார். என்ன ஆச்சரியம், பொள்ளாப் பிள்ளையார் கருணையால் திருக்கதவங்களைப் பூட்டி இருந்த பூட்டு தாமாகவே திறந்து கொள்ள அறைக்கதவு திறக்கப் பட்டது. நம்பியும், மன்னனும் பயத்தோடும் பக்தியோடும் அறைக்குள் சென்று பார்த்தால்? ஆஹா! இது என்ன மாபெரும் புற்று? மன்னனின் இதயம் நொந்து போய், மன்னன் மிக்க துயரம் அடைந்தான். திருப்பதிகங்கள் எழுதப் பட்ட செப்பேடுகள் புற்று மண்டிக் கிடக்க, மன்னன் மிக்க பிரயத்தனத்துடன் புற்றினை நீக்கிச் செப்பேடுகளை வெளியே எடுத்துவரச் செய்தான். சில ஏடுகள் சிதைந்து போயிருக்கக் கண்ட மன்னன் மனம் வருந்தினான். அவ்வமயம் விண்ணில் இருந்து அசரீரி வாக்கில், "நாம் விரும்பியவாறே இங்கே வேண்டியவன விட்டு மற்றவை மண் மூடச் செய்தோம்!" என்று வர, மன்னன் சற்றே மன ஆறுதல் பெற்றான்.
மிகுந்திருந்த திருமுறைகளை வெளியே கொண்டுவந்த மன்னன் அவற்றை எண்ணைக் காப்பிட்டுச் சுத்தம் செய்தான். நம்பியாண்டார் நம்பியை அவற்றை முறைப்படித் தொகுத்துத் தரச் செய்தான். அந்தத் திருமுறைகளைத் தொகுத்த நம்பி அவற்றைப் பதினொரு திருமுறைகளாக வகுத்தார். முதல் மூன்று திருமுறைகளாக திருஞானசம்மந்தரின் தேவாரப் பாடல்களும், திருநாவுக்கரசரின் பதிகங்கள் முறையே 4, 5, 6-ம் திருமுறையாகவும், சுந்தர மூர்த்தி நாயனாரின் பதிகங்கள், 7-ம் திருமுறையாகவும் தொகுத்தார் நம்பி. பின்னர் மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார் என்னும் பதிகங்களை 8-ம் திருமுறையாகவும், திருமாளிகைத் தேவர், சேர்ந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி, காட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதர், புருஷோத்தம நம்பி, சேதிராயர் போன்ற ஒன்பதின்மர் பாடிய திருவிசைப் பாக்கள் அனைத்தும், அது தவிர, சேர்ந்தனாரால் பாடப் பட்ட திருப் பல்லாண்டும் சேர்ந்து, ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப் பட்டது.
திருமூலரின் திருமந்திரப் பாடல்கள் பத்தாந் திருமுறையாகவும், திருவாலவுடையார் பாசுரங்கள், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன், நக்கீர தேவர், கல்லாடனார், கபில தேவர், பரம தேவர், இளம்பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையோர் ஆகியோர் பாடியவை பதினோராம் திருமுறையாகத் தொகுக்கப் பட்டது. நம்பி தாம் பாடிய திருத்தொண்டர் வரலாற்றைக் கூறும் திருவந்தாதி, தொகையடியார் ஒன்பதின்மர், தனியடியார் அறுபத்து மூவர் ஆகிய எண்பத்தொன்பது பாடல்களையும் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி பதினோராம் திருமுறையில் சேர்த்தார். பின்னர் மன்னனின் வேண்டுகோளின்படி அவற்றுக்குப் பண்ணும் அமைத்தார் நம்பி. மன்னன் பதினோரு திருமுறைகளையும் செப்பேடுகளிலே செய்து, தில்லைப் பெருமானின் கோயிலிலே பத்திரப் படுத்தி சைவ சமயம் தழைக்கச் சிறந்த முறையில் தொண்டாற்றி, "திருமுறை கண்ட சோழன்" என்ற பெயரும் பெற்றான்.
வரும் நாட்களில் நாயன்மார்களில் சிலரின் வரலாற்றைக் காண்போம்.
கீதா சாம்பசிவம்
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















