அறூபத்து மூவர் - 7
பிள்ளையார் பாட்டி
அருந்தொண்டாற்றிய நாயன்மார்கள்
நாயன்மார் வரலாறு - சேக்கிழார்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்லாம்தொழுதுண்டு பின் செல்பவர்.
என்பது வள்ளுவர் வாக்கு.
நாம் பாரதத் திருநாடும் உழவை நம்பி, விவசாயத்தை நம்பி இருக்கும் நாடே ஆகும். இந்த நாட்டில் வேளாண்குடிகள் தோன்றியது பற்றி இவ்வாறு கூறப்படுகின்றது. வேளாண்மரபிற்கு ஈசன் அளித்த கொடை இது எனவும் கூறப் படுகின்றது. செஞ்சடையான் ஆன அந்த ஈசன் ஒரு நாழி நெல்லை உமை அம்மையிடம் கொடுக்க அம்மையும், அதைத் தன் குடிமக்களிடம் தர, அந்த மக்கள் பூமிக்கு வந்து, இந்த பூமியைக் கழனி ஆக்கி, அலை மோதும் உப்பு நீர் நிறைந்த கடல் நீரை ஏரிகள் ஆக்கி, ஏரிக்கு நீர் பாய்ச்ச வருணனை நியமித்தனர்.
இப்போது வயல் தயார் ஆகி விட்டது. நீர் பாய்ச்ச நீரும் தயார் நிலையில். எப்படி உழுவது?? அதற்கும் எம்பெருமானார் துணை நின்றாராம். அவர் தம் வாகனமாம் விடையையும், கூற்றுவனாம் தர்மராஜாவின் வாகனம் ஆன கிடாவையும் தம் உழவுக்கு உதவும்படிக் கேட்டுப் பெற்றார்கள். இவ்வாறு பெற்ற அவர்கள் அந்த நிலத்தை உழக் கலப்பையாக பலராமனின் ஆயுதத்தை வேண்ட கலப்பையும் கிடைக்கப் பெற்றனர். உமை அம்மை கொடுத்த ஒரு நாழி நெல்லை விதைத்துப் பயிராக்கி, இந்தப் பூவுலக மக்களின் பசி ஆற்றும் வேலையை அன்று முதல் இன்று வரையில் வேளாண்குடி மக்கள் செய்து வருவதாய் ஐதீகம்.
இத்தகைய சீரும், சிறப்பும் வாய்ந்த வேளாண் குடியில், தொண்டை நாட்டில், உள்ள புலியூர்க்கோட்டத்தில் குன்றத்தூர் என்னும் ஊரில் தோன்றியவரே சேக்கிழார் என்பவர். இவருடைய இயற்பெயர் அருண்மொழி ராம தேவர் என்றாலும் இவரின் குடிப் பெயரான சேக்கிழார் குடிக்கே இவர் பெருமை சேர்த்ததால் இன்றளவும் சேக்கிழார் என்ற பெயரிலேயே அழைக்கப் படுகின்றார். இவருடன் பிறந்தவர் பெயர் பாலறாவாயர் ஆகும். இவரின் தந்தையார் சோழ மன்னனின் அரசவையில் அமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயம் சோழ நாட்டை ஆண்ட பிற்காலச் சோழ வம்சத்தில் பிறந்த அநபாய குலோத்துங்கனே ஆண்டு கொண்டிருந்ததாய்த் தெரிய வருகின்றது.
இவனது ஆட்சிக் காலம் கிபி. 1133-1150 வரை என்று சொல்லப் படுகின்றது. மன்னன் மிக்க நீதிமான். நீதி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான். அன்பும், பண்பும், நீதியும், நெறியும், வாக்குத் தவறாமையும் மன்னனிடம் இருந்தது. மனத்தூய்மை உள்ளவனாயும் இருந்து வந்தான். சேக்கிழார் தன் தந்தை அரசவைக்குச் செல்லும் போதெல்லாம் உடன் செல்லுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். சேக்கிழார் குடிப் பெருமை மட்டுமல்லாமல், நல்ல கல்வி அறிவும், நல்லொழுக்கமும், அரசியல் ஆற்றலும், புலமையும் கொண்டிருந்தார். சிறு வயது முதலே அரசனின் சமூகத்தில் சிறந்து விளங்கி வந்த சேக்கிழாரின் திறமையைக் கண்டு ஆனந்தம் அடைந்த மன்னன் அவரைத் தன் முதல் அமைச்சராய் ஆக்கிக் கொண்டான். பல ஆலயங்களுக்குத் தன் செல்வாக்கினாலும், மற்றத் திறமைகளாலும் திருப்பணிகள் செய்து சன்மார்க்கப் பாதையில் சென்று கொண்டிருந்தார் சேக்கிழார்.
ஆனால் அந்தச் சமயம் மன்னனோ நல்லாட்சி நடக்கின்றது என்ற காரணத்தாலோ என்னமோ தெரியவில்லை, திடீரென சமண மதத்தில் நாட்டம் கொண்டு, சமண நூல்களைப் படிப்பதோடு மட்டுமல்லாமல், கொள்கைகளையும் கடைபிடித்து வர ஆரம்பித்தான். தெள்ளு தமிழ்க் காவியம் ஆன சீவக சிந்தாமணியை மன்னன் மிகவும் விரும்பினான். சேக்கிழார் மனதை இது மிகவும் வருத்தியது. தாம் முதல் அமைச்சர் என்பதும், தம் பிரதானக் கடமை மன்னனுக்கு புத்தி சொல்லுவது என்பதையும் சேக்கிழார் நன்கு அறிந்தவரே. ஆகவே அவர் மன்னன் மனதை எப்பாடு பட்டாவது மாற்ற எண்ணினார்.
கீதா சாம்பசிவம்
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















