அறூபத்து மூவர் - 9
பிள்ளையார் பாட்டி
சேக்கிழார் பெரிய புராணம் எழுத ஆரம்பிச்ச கதையைப் பார்த்தோம். அதுக்கு முன்னாலே நம்பியாண்டார் நம்பிக்குத் தேவாரப் பதிகங்கள் கிடைச்ச விதத்தையும் பார்த்தோம். இது எல்லாம் ஒரு முன்னுரை மாதிரி. எவ்வளவு கஷ்டப் பட்டுத் தேடித் தொகுத்திருக்காங்க இல்லையா? அதுக்கப்புறமும் சேக்கிழார் விடா முயற்சியுடனேயே அறுபத்து மூன்று பேர்களையும் பற்றி ஆய்வு செய்து, அவங்க சரித்திரத்தைப் பாடலாக எழுதி வச்சிருக்கார். அது தான் பெரிய புராணம் என்ற பெயரிலே ஒரு வரலாற்று ஆதாரமாகவும் இன்றளவும் விளங்குகின்றது. அதிலே வரும் நாயன்மார்களில் சிலரைப் பற்றி இனி வரும் நாட்களில் காண்போம்.
சேக்கிழார் மாதிரியே நாமும் திருவாரூரில் இருந்தே ஆரம்பிக்கின்றோம். சோழவள நாடு, வளநாடு என்ற பெயர் பெற்றதின் காரணமே செழிப்பான நெல்வயல்களையும், குறைவில்லாத செல்வத்தையும் கொண்டு விளங்குவதால் தான். அத்தகைய பெருமை வாய்ந்த சோழநாட்டில் சிலகாலம் திரு ஆரூர் என்னும் திருவாரூர் தலை நகரமாய் இருந்து வந்திருக்கின்றது. மஹாலட்சுமி தவம் இருந்ததாய்ச் சொல்லப் படும் இந்தத் தலம் அவளின் கடைக்கண் பார்வையால் சகல வளங்களும் பெற்றுத் திகழ்ந்து வந்தது. "ஆரூரில் பிறக்க முக்தி" என்னும் அளவுக்கு மகிமை வாய்ந்து விளங்கியது.
இந்த ஆரூரில் பெருமை வாய்ந்த ஒரு சிவன் கோயில் இருந்தது. இறைவனுக்கு வீதி விடங்கன் எனப் பெயர். அங்கே அப்போது ஆட்சி புரிந்து வந்தான் ஒரு சோழன். அவன் பெயர் மனுநீதிச் சோழன். சூரிய குலத் தோன்றல்களான சோழர்கள் நீதியில் சிறிதும் வழுவாமல் நெறிமுறைகளுடன் ஆட்சி புரிந்து வந்ததால் இவனுக்கு இப்பெயரா அல்லது காரணப் பெயரா எனப் புரியவில்லை. ஈசனின் அருளால் மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஈசனின் பெயர் ஆன வீதி விடங்கன் என்னும் பெயரையே வைத்து மன மகிழ்வுடன் அந்த ஈசன் பெயரை நாளும், ஒவ்வொரு நிமிஷமும் நினைந்து பக்தி செலுத்தி வந்தான் மன்னன்.
வீதி விடங்கன் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்று அரச குமாரனுக்குரிய அனைத்துப் பணிகளிலும் சிறந்தும் விளங்கினான். இயல்பாகவே வந்த சிவபக்தியால் தன் தந்தையைப் போல் இவனும் இறைவனிடம் மாறாத பக்தி செலுத்தி வந்தான். ஒரு நாள் இளவரசன் தன்னுடைய தேரில் கோயிலுக்குச் சென்று ஈசனை வணங்கி வரப் புறப்பட்டான். அவனுடன் வழக்கமான பரிவாரங்கள். தேர் முன்னே செல்ல, பரிவாரங்கள் முன்னும், பின்னுமாய்த் தொடர்ந்தன. தேருடன் கூட இளவரசனின் விதியும் ஓடி வந்தது.
வேகமாய்ப் போய்க் கொண்டிருந்த தேருக்கு முன்னால் திடீரென ஒரு பசுங்கன்றுக் குட்டி ஓடி வர, தேரோட்டியால் தேரை நிறுத்த முடியாமல் போக, கன்று தேரின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டது. உயிரையும் இழந்தது. தாய்ப்பசு தன் கன்றை நோக்கிக் கதறிக் கொண்டு ஓடி வந்தது. இறந்து கிடக்கும் கன்றைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுகின்றது. வீதி விடங்கன் செய்வதறியாது திகைக்கின்றான். "இறைவா, இது என்ன சோதனை? நான் செய்த தவறுதான் என்ன?" என்று பலவாறாய்ப் புலம்பினான் இளவரசன்.
"புழு, பூச்சிக்குக்கூடத் தீங்கு நினைக்காத என் குலத்திற்கே அபகீர்த்தி இழைத்து விட்டேனே. சோழ குலமே அவமானப் பட்டு நிற்கும்படி ஆகிவிட்டதே. இதற்கு என்ன பரிகாரம் காண வேண்டுமோ, அதை முறைப்படி செய்தே தீருவேன்." என்று சொல்லிவிட்டுத் தன் ஆச்சாரியர்களைத் தேடி ஓடினான். ஆனால் தாய்ப்பசுவோ அரண்மனையை நோக்கி ஓடியது. அரண்மனை வாயிலில் ஒரு மணி கட்டித் தொங்க விடப் பட்டிருக்கும். ஆராய்ச்சி மணி எனச் சொல்லுவார்கள் அதை. மக்கள் தம் குறைகளைத் தெரிவிக்க அந்த மணியை அடித்தால் மன்னனே நேரில் வந்து மக்கள் குறைகளைக் கேட்டு தீர்த்தும் வைப்பான். ஆனால் மனுநீதிச் சோழனின் ஆட்சியில் இன்றளவும் அந்த மணி ஒரு முறையேனும் அடிக்கப் படவில்லை. இதோ, இப்போது முதன்முதலாய் இந்த மணி அடிக்கப் போகின்றது.
ஆம், ஓடி வந்த தாய்ப்பசு என்ன செய்கின்றது? மணியின் வாயில் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த சங்கிலியை இழுத்து மணியை ஒலிக்கச் செய்தது. விடாமல் இழுக்கின்றது தாய்ப்பசு தன் பலங்கொண்ட மட்டும். அதன் கண்களிலோ ஆறாகக் கண்ணீர். காவிரியே பெருக்கெடுத்து ஓடுகின்றாளோ என்னும் அளவுக்குக் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டே மணியை அடித்தது அந்தத் தாய்ப்பசு.
வளரும்.
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















