-
அருள் மணக்கும் அவதாரங்கள்
- A.K. Selvadurai
அழியும் பனி வெண்திரை புரட்டும்
ஆழிவயிறு கிடங் கெழுந்து
கிழிய நெடுமால் வரை துளங்கிக்
கீழ்வீழந்திடலும் தனிநின்று
சுழலும் பசும்பொன் கிரிமுதுகு
சொறிந்தாங்கணிதின் இளநறவம்
முழுகும் துளவோன் மோட்டானடை
யுருவம் எடுத்துத் தாங்கினனால்
அதன்பிறகு பாற்கடலைக் கடையக் கடையச் சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி, இரதி, இலக்குமி, அகலிகை, இந்திராணி, அறுபத்தறாயிரம் அரம்பாஸ்திரீகள், காமதேணு, கற்பக விருட்சம், ஐராவதம், உச்சை சிரவம் இவை முதலாகிய வஸ்துக்களும் தோன்றின. அதன்பிறகு அமுதம் கிடைத்தது. அமுதம் தோன்றியதும் தேவர்களும் அசுரர்களும் ஒருமித்த ஆரவாரத்துடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் தினைத்தனர். கடைவதை விட்டு விட்டுக் குதூகலத்தில் ஆழ்ந்தனர். எல்லோரும் திருமாலை ஒரு சேர விழுந்து சேவித்துத் துதித்தனர்.
திருமால் பாற்கடலில் பிறந்த இரதியை மாரனுக்கும், காமதேனு, கற்பக, விருட்சம், வெள்ளைக்குதிரை, ஐராணி, அரம்பாஸ்த்ரீகள், சங்கநிதி, பதுமநிதி ஆகியவைகளை இந்திரனுக்கும் அளித்தார். பிறகு அகலிகையை கௌதமருக்கும், மகாலட்சுமியையும், கௌஸ்துப மணியையும் தமக்குரியவைகளாக வைத்துக் கொண்டார். அமுதத்தை எப்படிப் பகிர்வது என்கிற பிரச்சனை ஏற்பட்டது. திருமால் தீர்க்கமாக யோசித்தார். ஏற்கனவே அசுரர்கள் எண்ணிக்கையிலும் பலத்திலும் அளவுக்கு அதிகமாக மிஞ்சியிருக்கிறார்கள். தேவர்களோ எண்ணிக்கையிலும் பலத்திலும் மிகக் குறைந்தவர்களாக இருப்பதுடன் துருவாசரின் சாபத்தினால் இருந்த பலத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே அளவுக்கு அதிகமான பலத்துடன் திகழும் இந்த அசுரர்கள் அமுதத்தைப் பருகுவார்களே ஆனால் நரை, திரை, மூப்பு, பிணி இவையெல்லாம் நீங்கப்பெற்று தேவர் கூட்டத்தையே அழித்துவிடுவார்கள். இதன் காரணமாக அகில உலகமும் கேட்டினை சந்திக்க நேரிடும். ஆகையால் அமுதத்தை அசுரர்கள் பருகாமல் தடுக்க ஏதாவது உபாயம் உள்ளதா என்று சிந்தித்தார்கள். அதன் விளைவாக ஒரு முடிவுக்கு வந்தவராக மச்சம், அன்னம், கூர்மம் என அவதாரம் எடுத்த திருமால் தான் மோகினியாகவும் அவதாரம் எடுக்க எண்ணினார்.
முகிலையொத்த குழலையும், மூன்றாம் பிறையன்ன நெற்றியையும், வில்லையனைய புருவத்தையும், வேலையொத்த கண்களையும், வள்ளை போன்ற செவியையும் எள் மலர் புரையும் நாசியையும், இலவம் பூ நிகர்ந்த வாயையும், முல்லையென விளங்கும் பல் வரிசையையும், தேனை, பாகை, கற்கண்டை நிகர்ந்த சொல்லையும், சந்திர பிம்பத்தை நிகர்ந்த முகத்தையும், கண்ணாடியை ஒத்த கபோலத்தையும், கமுகையொத்த கழுத்தையும், வேய்புரை தோளையும், உடையவளாய் ஜெகன் மோகினி அவதாரம் எடுத்தார் திருமால். அந்த அழகுத் தோற்றத்தைக் கண்டு அசுரர்கள் மயங்கி நின்றார்கள். சொர்க்கம், மத்தியம், பாதாளம் என்று சொல்லக்கூடிய மூவுலகங்களிலும் இது போன்ற அழகி இருந்ததே இல்லை என்று அசுரர்கள் மோகினியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் தேவர்கள் அசுரர்களை ஏமாற்றித் தங்களை உய்விப்பதற்காக ஆதிமூலவன் எடுத்த அற்புத அவதாரம் தான் இது என்று மகிழ்ச்சி கொண்டார்கள்.
அப்போது பரந்தாமன் அசுரர்களை நோக்கிக் கூறுகிறார், "அசுரர்களே, இந்த அமிர்தத்தை தேவர்களுக்கும் உங்களுக்கும் மனக்கசப்பு தேராத வகையில் பங்கிட ஒரு பொதுவான நபர் தேவை. அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த இந்த மோகினியை நான் அமிர்தம் பங்கிட்டு அளிப்பதற்காக நியமிக்கின்றேன் என்றார். அத்தோடு நில்லாமல் ஒரு கிண்ணத்தையும் ஒரு கரண்டியையும் உண்டுபண்ணி மோகினியிடம் கொடுத்தார்.
அசுரர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. இந்த மோகினியை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தே பெரும் பேறு இப்போது திருமால் அருளால் அவள் கரத்தினால் அமுதம் அளித்து அதைப் பெற்று அருந்துவது எல்லையில்லாத ஆனந்தம் அளீக்கும் பேறு அல்லவா? ஆவதுடன் அவள் அமுதம் பங்கிட்டு அளிக்கும் அற்புத நிகழ்வினுக்காக எல்லோரும் துடித்தனர்.
மோகினி அசுரரை ஒரு வரிசையிலும் தேவர்களை ஒரு வரிசையிலும் அமரும்படி சொன்னாள். அவ்வாரே தேவர்களும் மந்திரத்தால் கட்டுண்ட நாகம் போல் செயல்பட்டனர். அத்தருணத்தில் காசிபருடைய பேரன்களான இராகு, கேது என்பவர்கள் அசுரர்கள் வரிசையில் இருந்து உருமாறி தேவர்கள் வரிசையில் வந்து அமர்ந்து அமுதம் புசிக்க முயன்றனர். இதை சந்திரனும், சூரியனும் பார்த்துவிட்டனர். மோகினி வடிவத்தில் இருந்த திருமாலிடம் சமிக்ஞையில் காட்டிக் கொடுத்துவிட்டனர்.
பரந்தாமனும் இதை உணர்ந்திருந்தார். எனவே தன் கரத்திலிருந்த கரண்டியால் ஓங்கி அடித்தார். இருவரின் தலையும் தனியே கழன்று விழுந்தது. அரிபரந்தாமன் கடும் கோபத்துடன் ராகுவைப் பார்த்து நீ பாம்பு உடலுடனும், கேது தலையற்ற உடலுடனும் இருக்கக் கடவது என்று விதித்தார். எனவே அவர்கள் இருவரும் அன்று முதல் இறைவன் அருளால் ஏழு கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது என்று பெயர் பெற்று விளங்கினார்கள். அமுதம் உண்டதால் சாகா நிலையும், இறைவனைத் தவமிருந்து வேண்டியதால் கிரக பதமும் பெற்றார்கள்.
தங்களைச் சூரியனும், சந்திரனும், காட்டுக் கொடுத்த காரணத்தால் அமாவாசை, பௌர்ணமி ஆகொய இரு தினங்களிலும் சந்திரனையும், சூரியனையும் இந்த் இருவரும் பீடித்து விழுங்குவர். இந்த நிலைக்கு கிரகணம் என்று கூறுவர்.
அதன் பிறகு தேவர்கள் அனைவருக்கும் மோகினி வடிவில் திருமால் அமிரதம் வழங்கினார். இப்படியே தேவர்களுக்குத் தொடர்ந்து அமிர்தம் வழங்கிக்கொண்டே வந்தார். அசுரர்கள் முறை வருகின்றபோது அமிரதம் முழுவதும் தீர்ந்து போனது.
இதன் காரணமாக அசுரர்கள் எல்லையற்ற கோபத்திற்கு ஆளானர்கள். ஆத்திரப்பட்டார்கள். தேவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவும் அசுரர்கள் கொதிப்பான சூழ்நிலையில் இருக்கவும் இப்படிப்பட்ட நிலையில்தான் திருமால் மோகினி வடிவில் இருந்து தனது உண்மை வடிவிற்கு மாறினார். எரிகிற கொள்ளியில் எண்ணெய் விட்டது போல் அசுரர்கள் மேலும் கொதிப்படைந்தனர். திருமால் ஸ்ரீ வைகுந்த லோகம் போய்ச் சேர்ந்தார்.
திருமாலின் இந்தச் செய்கையை அசுரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கபடநாடக சூத்திரதாரியாகத் திருமால் செயல்பட்டதை அவுணர்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டதால் தேவர்கள் மீது பகைமை கொண்டனர். அசுரர்களின் இச்செயலை படைப்புக் கதிபதி பிரம்மதேவன் அறிந்து திடுக்கிட்டு எதிர்காலத்தில் ஏற்பட்ப்போகும் கடுமையான விளைவுகளைத் தவிர்த்தேயாக வேண்டும் என்ற முடிவெடுத்தார். இதன் காரணமாக பிரம்ம தேவன் யாராவது ஒருவரை தேவர்களின் சார்பாக அசுரர்களிடம் அனுப்பி சமாதானம் செய்தாக வேண்டும் என்று எண்ணினார்.
சப்தரிஷிகளுக்கும் மூத்தவன், திரிலோக சஞ்சாரி, பிரம்மபுத்திரன், நாரத முனிவனையே அனுப்புதல் தலம் என்று முடிவு செய்தார்கள். என்வே நாரதமகா முனிவனை அனுப்பினார்.
நாரதர் தேவர்களையும் அசுரர்களையும் அணுசித் தனது நாவன்மையினால் நயமாகப் பேசி இரு திறத்தாரையும் சமாதானப்படுத்தினார். இதனால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நிகழவிருந்த போர் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்தது.
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||


















