-
அறுபத்து மூவர் - 14
- கீதா சாம்பசிவம்
நாவலூரார், “ஆஹா, இவன் பெரும்பித்தனாவான்” என எண்ணிக் கொண்டு, “ஐயா, நான் குற்றமற்றவன், கட்டாயமாய் உமக்குப் பித்துப் பிடித்திருக்கிறது.” என்று மீண்டும் சொல்ல, வேதியர், மீண்டும் கடுமையாக மறுத்து, நாவலூராரைத் தன் அடிமை என்றே கூறினார். நாவலூரார் வேதியர் கையில் இருந்த ஓலையைத் தட்டிப் பறிக்க முற்பட்டார். அந்தணர் அவரிடமிருந்து தப்பி ஓட, நாவலூராரும் அவரைத் துரத்திக் கொண்டு சென்றார். மணப்பந்தலைச் சுற்றி இவ்விதம் ஓடிப் பிடித்து விளையாடிய இருவரில் நாவலூரார் வெகு விரைவில் அந்த வேதியர் கையில் இருந்த ஓலையை வாங்கிக் கிழித்தார். வேதியரோ ஓட்டமாக ஓடியதில் களைத்தவர் போலக் காணப்பட்டவர், சுந்தரரின் இச்செயலைக் கண்டதும், பெருங்குரலில் கூப்பாடு போட்டு மற்றவர்களைத் தம் உதவிக்கு அழைத்தார்.
வந்திருந்தவர்களில் சிலர் அந்த முதிய வேதியரை அணுகி, “ஐயா, தங்கள் வழக்கே மிகவும் விசித்திரமாய் உள்ளதே? அதுவும் மணநாள் அன்று வேண்டுமென்றே திருமணத்தைத் தடுக்கவே இவ்விதம் நடக்கின்றீரோ என ஐயமும் எழுகின்றது எங்களுக்கெல்லாம். யார் நீர்? உண்மையைச் சொல்லும், எது உமது பூர்வீகம்?” எனப் பலவாரு கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அந்த வேதியர், “நான் அருகிலுள்ள வெண்ணெய் நல்லூரில் பிறந்து வளர்ந்தவன். இவன் பாட்டன் தான் இந்த நாவலூரன் எனக்கு அடிமை என எழுதிக் கொடுத்தவன். இல்லை எனில் இந்த நம்பி ஆரூரர் எதற்காக இந்த ஓலையைக் கிழித்து எறிய வேண்டும்? உண்மை தெரிய வேண்டாம் என்பதற்காக அன்றோ இவ்விதம் செய்துள்ளான். இதை விடவும் வேறு என்ன சான்று வேண்டும் உங்களுக்கெல்லாம்?” என்று கேட்டார்.
சபையோரும், "சரி, அப்படியானால் உங்களது வழக்கை வெண்ணெய் நல்லூரிலேயே தீர்த்துக் கொள்ளலாமே" என்று கூற, சுந்தரரும், "ஆம், அதுதான் சரி" என்று சொன்னார். முதியவரும், "சரி, இப்போது இவன் கிழித்த ஓலை நகலே ஆகும். அசல் ஓலையைப் பத்திரமாய் வைத்துள்ளேன். வெண்ணெய் நல்லூரிலே என் வீட்டிலேயே வந்து பார்த்துக் கொள்ளலாம்.“ என்று சொல்லிக் கொண்டு, மிகத் தள்ளாமையுடன் தடியை ஊன்றிக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார். ஆரூரர் அவர் பின் செல்லக் கூட்டமும் தொடர்ந்தது. மணவீடு சோகத்தில் ஆழ்ந்தது. வெண்ணெய் நல்லூர் சபைக்கு அனைவரும் வந்து சேர்ந்தனர். அங்கே தம் வழக்கை முன் வைத்தார் வேதியர். “என்ன, அந்தணர் அடிமையாவதா? அப்படி ஒரு வழக்கம் இருந்ததாகவோ, இருப்பதாகவோ தெரியவில்லையே? இந்த மாதிரியான வழக்குப் புதுமையாகவன்றோ உள்ளது? இன்று வரை கண்டதில்லை.” என கேலியாக நகைத்தவண்ணம் முதியவரைப் பார்த்து அவையோர் கூறினார்கள்.
முதியவரோ, “இவன் கிழித்த ஓலை இன்று நேற்று எழுதியதல்ல. பழங்காலம் தொட்டுப் பாதுகாக்கப் பட்டு வருகிறது. ஒரு உடன்பாட்டின் மூலம் இவன் பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்தான். இப்படி இருக்க, நீங்கள் எப்படி என் வழக்கை அர்த்தமற்ற வழக்கு எனச் சொல்ல முடியும்?” என்று கேட்டார். அவையோரும் உடனே அந்த வேதியருக்கு ஆறுதல் சொல்லும் முகமாய் நம்பி ஆரூரரை நோக்கி, “முதியோர்கள் உடன்பாட்டுடன் எழுதிய ஓலை எனச் சொல்லுகின்றாரே, அதை வாங்கி நீர் கிழித்திருக்கிறீரே? பிழையன்றோ? இவருடைய இந்த வழக்கைப் பற்றி உம்முடைய எண்ணம் என்ன?” என்று கேட்டனர். நம்பி ஆரூரர் முதியவர் ஏதோ மாயம் செய்வதாயும், அதற்கு முன்னர் தம்மால் ஏதும் செய்ய முடியவில்லை என்றும், இந்த வழக்கு தமக்கே விளங்கவில்லை என்றும் கூறி முடித்தார். அவையோர் தமக்குள் கலந்தாலோசித்தனர். நம்பி ஆரூரரோ ஆதி சைவர். மறந்தும் பொய் பேசமாட்டார். முறை தவறியும் நடக்க மாட்டார். என்ன செய்யலாம்? யோசனனயுடன் அவர்கள் முதியவரைப் பார்த்து, “இவர் உமக்கு அடிமை என்பதை எவ்விதமாவது ஆதாரத்தோடு நிரூபித்துக் காட்டுவீராக.“ என்று சொல்ல, வேதியரும் மன மகிழ்ச்சியுடன், தாம் மூல ஓலையைப் பத்திரமாய் வைத்திருப்பதாகவும் அதைக் காட்டுவதாகவும் கூறினார். ஆனால் இந்த நம்பி ஆரூரன் அதையும் வாங்கிக் கிழித்துவிடுவானே எனக் கலங்குபவர் போலும் நடித்தார். அவையோர் தங்கள் முன்னால் இத்தகைய செயல் ஏதும் நடக்க விடமாட்டோம் என உறுதி கூற, உடனே ஆரூரருக்குப் பயப்படுபவர் போல நடித்த வண்ணமே, மூல ஓலையை எடுத்து அவையோரிடம் காட்டினார். அந்த ஓலையில் பின்வருமாறு எழுதி இருந்தது.
“திருநாவலூரில் இருக்கும் ஆதிசைவன் ஆகிய ஆரூரன் என்னும் பெயருள்ள நான், திருவெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது என்னவெனில், நானும் என் வழிவரும் மரபினோரும் வழிவழியாய் இவருக்கு அடிமைத் தொழில் செய்து வருவோம் என்பதற்காக உள்ளும், புறமும் ஒருமைப்பட்டு எழுதிக் கொடுத்த ஓலை. இது என் சுய உணர்வோடு போடப் பட்ட கையொப்பம்.”
இந்த வாசகங்களை ஓலையைக் கையில் வாங்கிய கணக்கன் படிக்கக் கேட்ட சபையோர் ஓலையை வாங்கிப் பார்க்க, அதில் சாட்சிக் கையொப்பம் இட்டோரும் இது தங்கள் கையொப்பமே என உறுதியுடன் ஒத்துக் கொண்டனர். ஆரூரரின் பாட்டனார் கையொப்பத்தைச் சரிபார்க்கும் பொருட்டு அவர் எழுதிய வேறு சில ஓலைகளையும் கொண்டு வந்து அதையும் சரிபார்த்தால், என்ன ஆச்சரியம்? கையொப்பம் ஒத்துப் போயிருந்தது. அவையோர் அந்தணர் கூறுவது உண்மையே என ஒப்புக் கொண்டு, ஆரூரன் அந்தணருக்கு அடிமையாய்ப் பணி செய்வதுதான் கடமை எனத் தீர்ப்பு வழங்கினார்கள். ஆரூரருக்கு ஏதும் புரியாவிட்டாலும், அவையோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிவதே தன் கடமை என உணர்ந்து தலை வணங்கித் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார். அவையோர் முதியவரிடம், “ ஐயா, ஓலையில் நீர் வெண்ணெய் நல்லூரில் இருப்பதாய்க் குறிப்பிட்டுள்ளீர். உம் இருப்பிடம் எதுவென எங்களுக்குக் காட்டுவீராக!” என்று கேட்க, எம்பெருமான் அவர்களை அழைத்துக் கொண்டு தம் இருப்பிடத்தைக் காட்டவேண்டி, அவ்வூரிலுள்ள திருவட்டுறை என்னும் கோயிலை அடைந்தார். அனைவரும் பின் தொடர்ந்து வர அம்முதியவராய் வந்த இறைவனோ, கோயிலுள் சென்றவர் மறைந்தார். நெடுநேரம் காத்திருந்தும் முதியவர் வரக்காணாத மற்றவர்கள் வெளியேற, ஆரூரரோ, அந்தக் கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்த வண்ணம் அந்தணரைத் தேடத் தொடங்கினார். எப்படியேனும் அவரைக் கண்டே தீருவது என்ற எண்ணத்தோடு தேடிய ஆரூரருக்கு உடலும், மனமும் தளர ஆரம்பிக்கும் வேளையில் கோயிலுள் பேரொளி பிறந்தது. அந்தணராக வந்த ஈசன், தம் அருள் வடிவிலே, உமையாள் உடனிருக்க ரிஷபாரூடராய்க் காட்சி அளித்தார்.
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














