-
அறுபத்து மூவர் - 15
- கீதா சாம்பசிவம்
ஆரூரருக்கு ஆநந்தக் காட்சி அளித்த ஈசனைக் கண்ணாரக் கண்டு களித்தார் சுந்தரர். ஈசனும் சுந்தரரிடம், “அப்பனே! சுந்தரா! நீ பூர்வ ஜென்மத்தில் இருந்தே நம் தொண்டன் ஆவாய்! நீ பெண்களைப் பார்த்துவிட்டு மதி இழந்து நின்றதாலேயே மனிதப் பிறவி எடுக்கும்படி நேரிட்டது. மீண்டும் அதே பிறவிப் பெருங்கடலில் நீ விழப் பார்க்கிறாய் என்பதாலேயே உன்னை நாம் தடுத்தாட்கொண்டோம்.” என்று சொன்னார். ஈசனின் திருவுருவ தரிசனமும், அவர் தம் சொற்களையும் கேட்ட சுந்தரர் மனதில் மகிழ்ச்சி மீதூற, அவரை அப்படியே வணங்கி மகிழ்ந்தார். “இறைவனோடு வாதம் புரிந்த நீ எம்மை வன்மையாகவும் பேசியதால் உன்னை நான் வன் தொண்டன் என அழைக்கிறேன். எம்மை நீ உன் தமிழ்ப்பாக்களால் மாலை சூட்டி அழகு பார்ப்பாயாக!” என்ரார். ஆஹா, எதுவுமே தெரியாத நம்மை ஈசனே பாடு, அதுவும் தமிழ்ப்பாக்களாய்ப் பாடு எனச் சொல்லிவிட்டாரே என்ற மகிழ்வு ஒருபக்கமும், குழப்பம் மறுபக்கமும் நீடிக்கப் பாடும் வகை அறியாது குழம்பி மீண்டும் ஈசனையே வேண்டினார். பாடும் வகை அறிந்திலேனே என மனம் வருந்தினார். அவர் வருத்தம் கண்ட ஈசனும், “நீ எம்மைக் கண்டதும், “பித்தா” என அழைத்தாய் அல்லவோ? அந்த வார்த்தையையே முதலடியாக வைத்துப் பாடுவாயாக!” என்று சொன்னார்.
சுந்தரர் உடனேயே மனதில் பஞ்சாக்ஷரத்தை நினைத்துக் கொண்டே, “பித்தா, பிறை சூடி, பெருமானே, அருளாளா” என்று ஆரம்பித்து பதிகம் ஒன்றைப் பாட ஆரம்பித்தார். சுந்தரருக்கு அருள் புரிந்த ஈசனும் பாடலைக் கேட்டு மகிழ்ந்தவண்ணம் மறைந்து போக, சுந்தரரும் திருநாவலூர் திரும்பினார். திருமணம் தடைப்பட்டதால் மனம் வருந்தியவண்ணம் இருந்தாள் ஆரூரரை மணக்க இருந்த பெண்மணி. அவரையே நினைத்து வாழ்ந்த அந்தப் பெண் சீக்கிரமே ஈசன் திருவருளால் அவன் திருவடி சென்று அடைந்தாள். ஆரூரரோ ஈசனைப் புதிய பதிகங்களால் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார். பின்னர் இதே ஊரிலேயே இருப்பதை விட ஊர், ஊராகச் சென்று ஈசன் குடி கொண்டிருக்கும் கோயில்களை எல்லாம் தரிசிக்கலாம் என்ற ஆவலோடு முதலில் துறையூர் சென்றார். பின்னர் அங்கிருந்து தில்லைக்குக் கிளம்பினார், பெண்ணை ஆற்றைக் கடந்து திருவதிகை வந்தடைந்து, அருகிலுள்ள சித்தவடம் என்னும் இடத்திற்குச் சென்று தங்கினார்.
திருவதிகை எம்பிரான் மீண்டும் ஓர் திருவிளையாடலை நடத்த எண்ணினார் போலும். ஒரு முதியவர் வேடத்தில் அவரும் சித்த வடம் வந்து சுந்தரர் தலை மீது தம் கால்கள் படுமாறு வைத்துக் கொண்டு உறங்குவது போல் நடிக்கலானார். யாருடைய பாதமோ தன் மீது படுவதை உணர்ந்த சுந்தரர் விழித்து எழுந்து பார்க்க, முதியவர் ஒருவரைக் கண்டார். அவரை எழுப்பி நிலைமையைச் சொல்ல அவரும், தம் முதுமையால் விளைந்த தவறு என மன்னிப்புக் கேட்க, அவ்வளவில் சுந்தரர் வேறு இடம் சென்று படுத்தார். சிறிது நேரத்தில் மீண்டும் அதே பாதங்கள், தம் தலை மீது. சுந்தரர் எழுந்து இடம் மாற அங்கேயும் இதே தொல்லை. உடனேயே வந்திருப்பவர் சாதாரண ஆள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு, நீர் யார் என சுந்தரர் கேட்க, எம்மை அறிய மாட்டாயோ சுந்தரா? எனக் கேட்ட வண்ணம் ஈசன் மறைய, ஆஹா, ஆலமுண்ட அண்ணலின் திருவிளையாடல்களைப் புரிந்து கொள்ளும் பாக்கியம் பெறாமல் போனேனே! ஈசா! உன் பொற்பாதங்கள் என் தலை மீது பட நான் எவ்வளவு பேறு செய்திருக்க வேண்டும்? என எண்ணிய வண்ணம், “நம்மானை அறியாத சாதியார் உளரோ” எனத் தொடங்கும் பதிகம் ஒன்றால் ஈசனைத் துதித்தார். பின்னர் அங்கிருந்து தில்லைப்பதிக்குச் சென்றார்.
தில்லை வாழ் அந்தணர்கள் முன்பே சுந்தரர் வருகையை எதிர்பார்த்துத் தயாராகக் காத்திருந்தனர். சுந்தரரும் அந்தணர்களை வணங்கிக் கொண்டு சிற்றம்பலம் வந்தடைந்தார். பொன்னம்பலத்தில் ஆநந்த நடனம் ஆடும் கூத்தனைக் கண்ணாரக் கண்டு களித்த சுந்தரர், கண்களைத் தவிர மற்ற அவயவங்கள் அனைத்தும் ஒடுங்கிப் போய்விட்டதோ என்று எண்ணுமாறு காட்சி அளித்தார். பதிகங்கள் பல பாடி ஈசனைத் துதித்த சுந்தரரை ஈசன், “ஆரூருக்கு வா!” என்று கட்டளை இட்டார். சுந்தரரும், வழியில் உள்ள சீர்காழி, திருக்கோலக்கா, திருப்புங்கூர், மாயவரம், அம்பர்மாகாளாம், திருப்புகலூர் போன்ற ஊர்களைத் தரிசித்துக் கொண்டு ஆரூரை வந்தடைந்தார். இனிதான் சுந்தரர் வாழ்வில் முக்கியச் சம்பவங்கள் நிகழ இருக்கின்றன, ஆனால் சுந்தரர் அதை அறிய மாட்டார்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















