-
அறுபத்து மூவர் - 16
- கீதா சாம்பசிவம்
சுந்தரரின் வருகையைத் திருவாரூர் சிவனடியார்களுக்கு ஈசன் முன்கூட்டியே உணர்த்த எண்ணினார். அவர்களது கனவில் எழுந்தருளி, “என் அழைப்பிற்கு இணங்கி எம்மால் தடுத்தாட்கொள்ளப்பட்ட தொண்டன் நம்பியாரூரன் இந்த ஆரூருக்கு வருகின்றான். அவனை எதிர்கொண்டு அழைத்து வரவேற்பீர்களாக!” என்று பணித்தார். தொண்டர்களால் ஊர் மக்களுக்கும் செய்தி அறிவிக்கப் பட்டு அனைவரும் ஊரையும், தெருக்களையும், வீட்டையும் அலங்கரித்து, தம்மையும் அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தனர். வெண்மணல் பரப்பிய வீதிகளில் தோரணங்கள் கட்டப் பட்டு, பூப்பந்தல்கள் போடப் பட்டு வாழைமரங்களாலும், பனை ஓலை, தென்னை ஓலைக் குருத்துகளாலும் அலங்கரிக்கப் பட்டன. மலர்மாலைகளும், கிரீடங்களும் தயார் செய்யப் பட்டன. பொற்கும்ப கலசங்களோடு பூரணகும்ப மரியாதையோடு நம்பி ஆரூரர் திருவாரூருக்குள் அழைப்பட்டார். பேரிகைகள் முழங்க, மங்கல வாத்தியங்களின் இனிமையான இன்னிசை ஒலியில், வேதியர்கள் மந்திரங்கள் ஓத, “சிவ, சிவ, ஹர, ஹர சம்போ” என்ற கோஷம் விண்ணை முட்ட நம்பி ஆரூரர் தம் வாழ்நாளின் முக்கியமான ஒரு சம்பவத்தின் கர்த்தாவாக விளங்கப் போகிறோம் என்பதை அறியாதவராய் நுழைந்தார்.
ஈசன் மேல் பதிகம் ஒன்றைப் பாடியவண்ணம் கோயிலுக்குள் நுழைந்து தேவாசிரிய மண்டபத்தை வணங்கித் துதித்து எம்பெருமானின் அருளுக்குப்பூரண பாத்திரர் ஆனார். அப்போது ஆரூர் தியாகராஜர் அசரீரியாக அவருக்குத் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையை ஆரம்பிக்குமாறு கட்டளை இட்டார். மேலும் ஆரூரரை, “நீ என் தோழன்” எனச் சொல்லி மகிழ்ந்தார். தம்பிரான் தோழர் என அழைக்கப் பட்ட நம்பி ஆரூரர் இறைவனின் அருளை எண்ணி வியந்து அங்கே தங்கி ஆரூர் தியாகராஜப் பெருமானை நினைந்து உருகிப் பாமாலைகள் சார்த்தி வழிபடலாயினார். அந்த ஊரிலேயே அவருக்குரிய மணப்பெண் பிறந்து வளர்ந்து வந்தாள். கைலை மலையிலே சுந்தரர் ஆசை பொங்க விரும்பிப் பார்த்த உமா தேவியாரின் இரு சேடியரில் ஒருத்தியான கமலினி என்பாள் அதே ஊரிலே உருத்திர கணிகையர் மரபில் பிறந்து பரவையார் என்னும் திருநாமத்துடன் வளர்ந்து வந்தாள். ஈசனிடத்தில் இயல்பாகவே பக்தி மிகுந்து காணப்பட்ட பரவை நாச்சியார் தினமும் தூய நீராடி தியாகேசப் பெருமானக் தரிசித்துச் செல்லும் வழக்கம் வைத்திருந்தார். அது போல் ஒரு நாள் காலை நீராடித் தம் தோழியார் புடை சூழக் கோயிலுக்கு வந்தார் பரவையார். அப்போது சுந்தாரும் அன்பர்கள் சூழக் கோயிலுக்கு வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதுதானே இறைவன் விருப்பமும் கூட. அவ்விருப்பத்தின்படியே எல்லாம் நடந்தன.
பரவையாரின் அழகில் மெய்ம்மறந்து போன சுந்தரரின் ஒளி பொருந்திய முகம் இன்னும் ஒளி வீசிப் பிரகாசிக்கப் பரவையார் அந்த அழகில் தம்மை இழந்தார். இருவரும் ஒருவர் அழகிலும், குணத்திலும் தம்மை இழந்தனர். பரவையார் யார், எவர் என்பதைக் கேட்டறிந்த சுந்தரர் அவர் நினைவாய்க் கோயிலிலேயே இருந்த தேவாசிரிய மண்டபத்தில் தங்கிவிட்டார். பரவையாருக்கோ சுந்தரர் யார் எனத் தெரியாமல் குழப்பம் ஏற்படத் தோழியரை விசாரித்துவரச் சொன்னார். ஈசனால் தடுத்தாட்கொள்ளப் பட்ட தம்பிரான் தோழர், நம்பி ஆரூரர் எனத் தெரிந்து கொண்டு அவரை அடைவது எங்கனம் என எண்ணி ஏங்கினார். ஆனால் இருவரும் சேர வேண்டும் என்பதே இறைவன் விருப்பம் அன்றோ? அடியவர்கள் கனவிலும், சுந்தரர், பரவையார் கனவிலும் ஈசன் தோன்றி சுந்தரருக்கும், பரவையாருக்கும் திருமணம் புரிவிக்குமாறு ஏவினார். திருமண ஏற்பாடுகள் நடந்து இருவருக்கும் வெகு விமரிசையாகத் திருமணமும் நடந்தது. மன மகிழ்வோடு இருவரும் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுக் குடும்ப வாழ்க்கையோடு அடியார் சேவையும், ஆண்டவன் சேவையும் நடத்தி மன மகிழ்வோடு வாழ்ந்து வந்தனர்.
அப்போது ஒரு நாள் சுந்தரர் சிவனடியார்களைப் பற்றி எண்ணி அவ்வடியார்களுக்கெல்லாம் தாம் அடியானாக இருந்து தொண்டு புரிய வேண்டும், அடியார் தம் பெருமை உலகறியச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கருத்தில் கொண்டு கோயிலுக்குச் சென்றார். அங்கே தேவாசிரிய மண்டபத்தில் அடியார் பலர் கூடி இருந்தனர். அதில் விறல்மிண்ட நாயனார் என்பவரும் இருந்தார். அவர்களை எல்லாம் கண்ட சுந்தரர் இத்துணைச் சிறப்பு வாய்ந்த அடியார்க்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என யோசித்தவராய்க் கோயிலில் நுழைந்து வீதிவிடங்கரை வேண்ட ஆரம்பித்தார். ஆனால் விறல்மிண்டரோ சுந்தரர் செருக்கினால் தம்மை அலட்சியம் செய்வதாய்த் தவறாய் எண்ணி, சுந்தரரை வன் தொண்டன் என அழைத்து இவன் அடியார்களுக்குப் புறம்பானவன். இவனை ஆட்கொண்ட அந்த வீதிவிடங்கனும் அடியார்களுக்குப் புறம்பானவன்.“ என்று கோபத்துடன் சுந்தரர் காதில் படுமாறு கூறினார்.
அதைக் கேட்ட சுந்தரர் அடியார்க்கெல்லாம் தாம் அடியானாகும் பேரின்ப நிலையைத் தந்தருளுமாறு ஈசனை வேண்டினார். வீதிவிடங்கரும் அடியார் பெருமையைப் பாடுமாறு சுந்தரரைப் பணித்தார். சுந்தரரோ, “திருத்தொண்டர்களைப் பாடும் அளவிற்குத் தாம் தகுதியற்றவன். அவர்களின் வரலாற்றுச் சிறப்போ, பக்தியின் சிறப்போ விரித்துரைக்கும் அளவுக்குத் தகுதியோ எனக்கில்லையே” என எண்ணி ஏங்கினார். ஈசனோ அவருக்கு “தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற அடி எடுத்துக் கொடுத்து மேலே பாடும்படி பணித்தருளினார். சுந்தரர் மெய்யுருக திருத்தொண்டத் தொகையைப் பாடிக் கொண்டே தேவாசிரிய மண்டபம் நோக்கிச் சென்று திருத்தொண்டர்களை வணங்கினார். சுந்தரரின் பெருமையை மற்ற அடியார்களும் புரிந்து கொண்டனர். இதற்கடுத்து சுந்தரருக்கு நேர்ந்தது, நெல்மலை கிடைத்தது.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















