சக்தி வடிவங்கள்
தாத்தா சீனு
மூன்று தெய்வங்கள் ஒரே சக்தி
காஞ்சி காமகோடி பீடம் மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் நவராத்திரி தேவியர் வழிபாடு பற்றி அருளிய வாக்கு இது."நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலட்சுமியையும், சரசுவதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா சகஸ்ரநாமம் கூறுகிறது.
பரதேவதையை வருணிக்கும் போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டி கர்த்ரீ ப்ரஹ்ம ரூபா) என்றும், அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ கோவிந்த ரூபிணி) என்றும், அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணி ருத்ரரூபா) என்றும் சொல்லுகிறது. லலிதாவாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான், மகாலட்சுமியாகவும்,சரஸ்வதியாகவும் இருக்கிறாள்.
லட்சுமி அஷ்டோத்திரத்தில் பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம என்று வருகிறது. சரஸ்வதி அஷ்டோத்திரத்திலும் இப்படியே பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம என்று வருகிறது. படைப்பு, காப்பு, அழிப்பு எல்லாவற்றையும் செய்வது ஒரே சக்திதான் என்று இந்தத் திருநாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வெறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு, வெவ்வெறு காரியங்களைச் செய்கிறாள். துர்க்கையாக இருக்கிறபோது, வீரம், சக்தி எல்லாவற்றையும் தருகிறது. மகாலட்சுமியாக இருந்து சகல சம்பத்துகளையும் அருளுகிறது. சரஸ்வதியாகி ஞானத்தை அளிக்கிறது.''
நவதுர்க்கை தரிசனம்
வராஹ புராணத்தில் 9 துர்க்கைகளின் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. களப்பிரம்மதேவர் ஒவ்வொரு அம்பிகையைப் பற்றியும் ஸ்லோகமாகச் சொல்லியிருப்பதன் அர்த்தம் இதுதான்.சைலபுத்ரி: இந்தத் தேவி காளையை வாகனமாகக்கொண்டு இரண்டு கைகளில் சூலமும் தாமரையும் வைத்துக்கொண்டு ஆனந்தமாகக் காணப்படுவாள்.
பிரம்மசாரிணீ: இந்தத் தேவி எப்போதும் தவத்திலேயே இருப்பாள். வெண்ணிற ஆடையுடன் வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் கமண்டலமும் தாங்கி வீற்றிருப்பாள். ப்ரஹ்ம என்றால் தவம் என்று பொருள். ஆகையால் தவம் செய்பவளுக்கு பிரம்மசாரிணீ என்று பெயர்.
சந்த்ரகண்டா: இவள் சிரசில் மணி வடிவத்தில் பாதிமதி உள்ளான். இவள் தங்கமயமான உடல் உடையவள்.
கூஷ்மாண்டா: புன் சிரிப்பிலிருந்தே உலகத்தை உண்டுபண்ணும் சக்திக்கு கூஷ் மாண்டா என்று பெயர். இவள் சூரியமண்டலத்திற்குள் வசிப்பவள். சூரியன்போல் பத்து திக்குகளிலும் தன் ஒளியை வீசுபவள்.
ஸ்கந்தமாதா: சைலபுத்ரி, பிரம்மசாரிணியாகத் தவமிருந்து சிவனை மணந்து, முருகனை ஈன்று, அவரைத் தன் மடியில் வைத்துக்கொண்டு உலகைக் காக்கும் தேவி இவள். இவளே தேவசேனாபதி ஆவாள்.
காத்யாயனீ: காத்யாயானர் என்ற முனிவர் அம்பாளை நோக்கித் தவம் புரிந்தார். அவளைத் தரிசித்ததும், தாயே, தாங்களே எனக்குப் பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அம்பாளும் அவருக்கு காத்யாயனீ என்ற பெயரோடு பெண்ணாகப் பிறந்தாள்.
காளராத்ரி: இவளின் நிறமோ இருளைப்போல் கருத்திருக்கும். தலைமுடி பறந்து கொண்டிருக்கும். கழுத்தில் மின்னல் போன்றதான மாலை ஒளிவீசும். மூன்று கண்களும் கோளம்போல் இருக்கும். மூச்சு விடும்போது அக்னி ஜ்வாலை வெளியில் வரும். கழுதை வாகனம் உடையவள். நான்கு கைகளிலும் கத்தி, அரிவாள், அபய வரத முத்திரைகளும் கொண்டிருப்பாள். பக்தர்களுக்கு அபயத்தையும் துஷ்டர்களுக்குப் பயத்தையும் அளிப்பாள்.
மஹாகெüரி: சந்திரன், சங்கு போன்ற வெள்ளை உருவத்துடன் எட்டு வயதுப் பெண் போன்று நான்கு கைகளுடனும், மூன்று கண்களுடனும், காளையின் மேல் வீற்றிருந்து பரமேச்வரன் போல் காட்சியளிப்பாள்.
ஸித்திதாத்ரி: தேவி புராணத்தில் இந்த சக்தி சிவனை ஆராதித்து அவருடலின் பாதி உடலை அடைந்து அர்த்தநாரீச்வரராக ஆனாள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீனிவாசன்
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















